தலைநகர் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்கு துணை போக முடியாது

மீண்டும் மனோவுடன் கைகோத்தார் ராஜேந்திரன்

தலைநகரத் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க தனிப்பட்ட முரண்பாடுகளை முன்வைத்து திட்டமிடும் தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் தான் தயாராக இல்லை என்று மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். இராஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் குழுவொன்றை ஆரம்பித்த இவர்கள், தலைநகர தமிழர் பிரதிநிதித்துவத்தை அழிக்கும் ஒரேயொரு நோக்கில் கூலிப்படையினராகவே செயற்பட்டனரென்றும் இராஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். தமிழர் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு, மலையக மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கான அபாயம் இல்லை. அங்கே பல தமிழ் எம்பீக்களை தெரிவு செய்யும் அளவிற்கு தமிழர் சனத்தொகை இருக்கிறது. ஆனால், கொழும்பு மாவட்டத்தில் அந்த நிலைமை கிடையாது. இங்கே ஒப்பீட்டளவில் தமிழர் சனத்தொகை குறைவு. எனவே இங்கே “கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்”.

இதன் காரணமாகவே தலைவர் மனோ கணேசனின் தலைமையை ஏற்றுக்கொண்டு, தனது தாய்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணிக்குத் திரும்பி வரத் தான் முடிவு செய்ததாக ராஜேந்திரன் தெரிவித்தார்,

சமீபத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ராஜேந்திரன், நேற்று அமைச்சர் மனோ கணேசனைச் சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டார்.

இந்த நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேசன், அமைப்பு செயலாளர் ஜனகன் வினாநாயகமூர்த்தி, மாநகரசபை உறுப்பினர் சுதர்ஷன், மத்தியகுழு உறுப்பினர் ஆனந்த குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து நடைபெற்ற ஊடக மாநாட்டில் எஸ். ராஜேந்திரன் மேலும் கூறியதாவது,

"எமது தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தன்னைவிட சிறந்த ஒரு தலைமையை கொழும்பில் உருவாக்க முடியுமானால், அதை செய்யுங்கள் என எப்போதும் பெருந்தன்மையாக எம்மிடம் கூறுவார். இந்நிலையிலேயே எனக்கு ஏற்பட்ட ஒருசில தவறான புரிதல் காரணமாகவும், தவறான வழிக்காட்டல்கள் காரணமாகவும் நான் எனது கட்சியில் இருந்து வெளியேற நேர்ந்தது. ஆனால், இன்று என்னை எமது கட்சியில் இருந்து வெளியேறும்படி வலியுறுத்தியவர்களின் உண்மை நோக்கம், ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் எதிரானது என்பதை நான் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே அறிந்துகொண்டேன். அதனாலேயே நான் கடந்த சில வாரங்களாக ஒதுங்கி இருந்தேன்.

நான் சென்று சேர்ந்துகொண்ட மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் இணையம் என்ற குழுவில், தலைவர் மனோ கணேசனை கொழும்பில் இருந்து ஒழிக்கும் ஒரே நோக்கில் மாத்திரம் இரகசிய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதை அறிந்து நான் அதிர்ச்சியுற்றேன். இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள பேரினவாத மகிந்த ராஜபக்ச அணியை சேர்ந்த நபர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடப்பதையும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தையே தோற்கடிக்கவும், கொழும்பில் தமிழர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் வைத்திருக்கவும், பேரினவாதிகளுடன் கூட்டு சதித்திட்டத்தை, இந்த சதிகார கும்பல் தீட்டுவதையும் என் மனசாட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை"என்றார்.

நமது நிருபர்

 

Thu, 04/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக