உலக கிண்ண கிரிக்கெட் தொடர்: ஆஸி அணிக்கு புதிய சீருடை

பல கோடி இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், தற்போது அனைவரினதும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொறு அணிகளும் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றது. உடற்தகுதி அணித்தேர்வு என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இதற்கிடையில், ஐந்து முறை உலகக்கிண்ணத்தை ஏந்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, உலகக்கிண்ண தொடருக்கான புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற புதிய சீருடை அறிமுகம் செய்யும் விழாவில், சகலதுறை வீரரான கிளென் மெக்ஸ்வெல் பங்கேற்றிருந்தார். அவர் இந்த சீருடை அணிந்து காட்சியளித்தார்.

இந்த சீருடையை பிரபல ஆடை நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1986ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தியதை போன்ற, பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த ஆடையே அவுஸ்திரேலிய அணி, பயன்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீருடையை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் முதல் முறையாக அவுஸ்திரேலிய அணி பயன்படுத்தியிருந்தது.

இதேவேளை, அடுத்த கோடை காலத்தில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மீண்டும் ரிட்ரோ சீருடைகளை அணிந்தே விளையாடவுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இதற்குமுன் 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பயன்படுத்திய சீருடையுடன் மேலும் ஏழு சீருடைகள் தொடர்பில் விசேட வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டது. இறுதியில் ரிட்ரோ சீருடைக்கு பெரும்பாலானோர் வாக்களித்ததால் அவுஸ்திரேலிய அணி அந்த சீருடையையே தொடர்ந்து பயன்படுத்தும் என அறிவிக்கப்பட்டது.

இம்முறை உலகக் கிண்ணப் தொடரில், அவுஸ்திரேலிய அணி, தமது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பிரிஸ்டெலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டாக முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் இல்லாமல் திணறிவந்த அவுஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் இந்திய அணியை 3-2 எனவும், பாகிஸ்தானை 5-0 எனவும் வீழ்த்தி தற்போது புது உத்வேகத்துடன் காணப்படுகிறது.

தற்போது ஓராண்டு தடை முடிந்து, இந்தியாவில் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிவரும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் மீண்டும், அணிக்கு திரும்பிவிட்டால் அவுஸ்திரேலியா மேலும் வலுவான அணியாகிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமல்லாமல், உலகக் கிண்ண தொடருக்கு, அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணி, எதிரணிகளுக்கு சவாலான அணியாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இவ்வாறு பலம் பொருந்திய அணியாக உருவெடுத்துள்ள அவுஸ்திரேலிய அணி, இம்முறை சாதிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த உலகக்கிண்ண தொடரில், இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகளில் ஒன்றே உலகக்கிண்ணம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகக்கிண்ண தொடருக்கான அணியை நியூஸிலாந்து மட்டுமே அறிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் ஏனைய அணிகள் தங்களது உத்தியோகபூர்வ அணியினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Thu, 04/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக