மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளுக்கு நிரந்தர ஆவணங்கள்

மானிய அடிப்படையில் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கான காணி சட்ட வரைபை அரசாங்கம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

காணிகள் மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க இச்சட்ட வரைபை முதலாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். இந்த சட்ட வரைபு எதிர்வரும் ஏழு வருடங்களுக்கு அமுலில் இருக்கும். இப்புதிய சட்டம் மூலம் 10 வருடங்களுக்கு முன்னர் மானிய அடிப்படையில் காணியை பெற்றுக் கொண்டவர்கள் நன்மையடைவர்.

அத்துடன் இச்சட்டத்துக்கமைய வெவ்வேறு வகை காணிகள் மற்றும் காணிக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களும் ஆகக்கூடியது ஐந்து ஏக்கர் வரையான காணிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 20 பேர் கொண்ட குழுவொன்று செயற்படும். அதில் அமைச்சின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரால் நியமிக்கப்பட்ட இரண்டு பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்குவர்.

இது தொடர்பில் கிடைக்கும் விண்ணப்பங்கள் குறித்து இக்குழு காணிகள் அமைச்சருக்கு தமது சிபாரிசை முன்வைக்கும். அதன்பின்னர் அமைச்சர் தெரிவு செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை ஜனாதிபதிக்கு முன்வைப்பார்.

ஜனாதிபதி அனுமதி வழங்கியவுடன் அவை காணி பதிவில் பதிவு செய்யப்படும்.

இதனடிப்படையில் காணி உரிமையாளர் தனது காணியை வாரிசுக்கு வழங்க முடியும். அல்லது அனைத்து வாரிசுகளதும் சம்மதத்துடன் காணியை விற்பனை செய்யவும் முடியும்.

எனினும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணி இன்னுமொரு விவசாயிக்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 04/20/2019 - 06:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை