கிழக்கில் நேற்று துக்கதினம் : மூவினத்தவரும் ஒத்துழைப்பு

நாட்டில் தேவாலயங்கள்,ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள கிழக்கு மாகாண மதத் தலைவர்கள், பொது அமைப்பினர்,பொது மக்கள் ஆகியோர் நேற்று கிழக்கு மாகாணம் முழுதும் துக்க தினம் அனுஷ்டிக்கவும் அழைப்பு விடுத்தனர்.

 இதனால் கிழக்கு மாகாணத்தின் முக்கிய இடங்கள், அரச அலுவலகங்கள், பொது இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.அரச அலவலகங்கள், மதஸ்தாபனங்கள், வர்த்தக நிலையங்களில் கறுப்பு, வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டது டன் அரச அலுவலகங்களில் தேசியக் கொடிகளும் அரைக்கம்பங்களில் பறக்கவிடப்பட்டிருந்தன.

பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டதாலும் போக்குவரத்துகள் இடம் பெறாததாலும் வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆத்மசாந்தி வேண்டி மத ஸ்தலங்களில் ஆராதனைகள் இடம் பெற்றதுடன் அரச அலுவலங்களில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் மூவின மக்களும் இந்த துக்க தினத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். தத்தமது பிரதேசங்களில் கடைகளை அடைத்தும், வௌ்ளை, கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும் நேற்று பூரண துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மாகாணத்திலுள்ள மாவட்ட அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மற்றும் பல்வேறு இடங்களிலும் இத்துக்க தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில்,ஆலையடிவேம்பு, கல்முனை, சம்மாந்துறை மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு, வெல்லாவெளி உள்ளிட்ட பகுதிகள், திருமலை மாவட்டத்தில் தோப்பூர், மூதூர்.

கிண்ணியா மற்றும் தமிழ், சிங்களப் பிரதேசங்களிலும் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகளில் பிரதேச அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(நமது நிருபர்கள்)

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை