தமிழ் மொழியில் அரசாங்க சேவையை பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது

சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கின்றபோதிலும் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தமிழ் மொழியில் சேவையை பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது.அரசாங்க சேவையை பெற்றுக் கொள்ளச் செல்லும் மக்களுடைய வேலைகள் இழுத்தடிக்கப்படுவது நல்ல விடயமல்லஎன பதுளை மாவட்ட ஐ.​தே.க எம்.பி அரவிந்த குமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (01) நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இலங்கையில் மிகச் சிறந்த நிர்வாகச் சேவை கட்டமைப்புண்டு. இதனை நாம் வரவேற்கின்றோம். என்றாலும் அரசாங்க சேவையை பெற்றுக் கொள்ளச் செல்லும் மக்களுடைய வேலைகள் இழுத்தடிக்கப்படுவது நல்ல விடயமல்ல. நிருவாகச் சேவை மக்களை திருப்திபடுத்துவதாக அமைய வேண்டுமே தவிர பிறர் எவரையும் திருப்தி படுத்துவதாக இருக்கக்கூடாது.

சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கின்றபோதிலும் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தமிழ் மொழியில் சேவையை பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது.நுவரெலியாவில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகின்றது. அம்மாவட்டத்துக்கு 200இற்கு மேற்பட்ட கிராமசேவை உத்தியோகத்தர்கள் தேவைப்பட்டபோதும் சுமார் 150பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றுள் 08பேர் மட்டுமே தமிழ் பேசுபவர்கள். அதேபோன்று பதுளையில் 100இற்கு மேற்பட்ட கிராமசேவை உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றபோதிலும் 119பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதில் மூவர் மட்டுமே தமிழ் பேசுபவர்கள். தமிழ் மொழி தெரிந்தவர்கள் இந்நியமனங்களின்போது புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவே நாம் நினைக்க வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலை எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்என்றார்.

(சபை நிருபர்கள்: லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்)

Tue, 04/02/2019 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை