மலையக மக்களின் பிரச்சினை; ஐ.நாவுக்கு செல்ல நேரிடும்

வடக்கு கிழக்குப் பிரச்சினையைப் போன்று மலையக மக்களின் பொருளாதாரப் பிரச்சினையையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலை உருவாகலாமென அமைச்சர் வீ. இராதகிருஷ்ணன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலையக மக்களின் பிரச்சினை சுமார் 150 வருடங்கள் பழமையானது. இவ்விடயம் தேசிய நீரோட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் வடக்கு கிழக்கு பிரச்சினையைப் போன்று இவ்விடயத்தையும் நாம் ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டு வர நேரிடுமென்றும் அவர் நேற்று வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு,பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, புதிய கிராமங்கள்,உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் வீ. இராதகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறியதாவது-, மலையக மக்கள் விடயத்தில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் தமது அனுதாபங்களைக் கொண்டுள்ளனர். எனினும் அந்த அனுதாபங்களை நடைமுறைப்படுத்தும்போதே பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. நாமல் எம்.பி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக கூறினார். அவர்கள் சுமார் 15 வருடங்களுக்கு மேல் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் அத்தேவைகளை ஏன் நிறைவேற்றவில்லையென நான் அவரை கேட்க்க விரும்புகின்றேன்.

யாராலும் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. உதவிகளை செய்யும் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாதீர்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரே பெருந்தோட்டத்துறைக்கென முதன் முறையாக தனியானதொரு அமைச்சை ஆரம்பித்து வைத்தார். அதற்காக நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று ஒரு இலட்சத்து 60 ஆயிரம்பேர் தோட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நம்பி 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் உள்ளனர். மலையகத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் 9'எ' எடுத்த மாணவர்கள் உள்ளனர். மலையகத்தில் அனைத்தும் நிறைவாக இல்லாதபோதும் அங்கும் திருப்திப்படும் வகையில் சில முன்னெற்றகரமான விடயங்கள் நடைபெற்று வருவதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

 

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை