வலுவான உறவை ஏற்படுத்த புடின் – கிம் இடையே உறுதி

முதல்முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்த உறுதி கொண்டுள்ளனர்.

ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான விலாடிவோஸ்டாக் அருகே, ரஸ்கி தீவில் இந்த இரு தலைவர்களும் நேற்று கை குலுக்கினர்.

இரு தலைவர்களும் அணு ஆயுத ஒழிப்பு குறித்துப் பேசுவார்கள் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க – வட கொரியப் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், ரஷ்யாவிடம் கிம் ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த டிரம்ப் – கிம் உச்சி மாநாடு தோல்வியில் முடிந்தது. வட கொரிய அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக எந்த முடிவையும் அந்த மாநாட்டில் எட்ட முடியவில்லை.

விலாடிவோஸ்டாக் சந்திப்பின்போது ஆரம்பத்தில் பேசிய இரு தலைவர்களும் ரஷ்யா – வட கொரியா இடையில் நிலவும் உறவின் நீண்ட வரலாற்றைக் குறிப்பிட்டுப் பேசினர். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உதவுவதாக புடின் உறுதியளித்தார்.

“கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலையை எப்படி சரி செய்வது என்பதையும், தற்போது நடந்துகொண்டிருக்கும் நேர்மறையான செயல்பாடுகளுக்கு ஆதரவாக ரஷ்யா என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு உங்களது இன்றைய ரஷ்யப் பயணம் உதவும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கிம்மிடம் புட்டின் கூறினார்

“ஏற்கனவே நீண்ட நட்பும் வரலாறும் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதியானதாக, ஆழமானதாக மாற்றும் ஒரு பயனுள்ள சந்திப்பாக இது இருக்கும்” என்று நம்புவதாக கிம் குறிப்பிட்டார்.

பித்தளை இசைக்கருவிகளை இசைத்து கிம்முக்கு இனிய வரவேற்பை அளித்தது ரஷ்யா. வரவேற்ற ரஷ்ய அதிகாரிகளிடம் தமது இதமான வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டார் வட கொரியத் தலைவர்.

தற்போது நின்றுபோன ஆறு நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைதான் கொரிய தீபகற்பத்தில் உள்ள அணு ஆயுதப் பிரச்சினையை கையாள்வதற்கு பயனுள்ள வழி என்று ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

2003இல் ஆரம்பித்த இந்தப் பேச்சுவார்த்தை வட கொரியா, தென் கொரியா, சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கியது. இதைத் தவிர, பயனுள்ள சர்வதேசப் பொறியமைவு ஏதும் இப்போதைக்கு இல்லை என்று கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் பெஸ்கோவ். அமெரிக்க – வட கொரியப் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், தமக்கும் வலிமையான கூட்டாளிகள் உள்ளது என்று காட்டவேண்டிய தேவை வட கொரியாவுக்கும், கொரிய தீபகற்பத்தில் தமக்கும் செல்வாக்கு உள்ளது என்று காட்டும் தேவை ரஷ்யாவுக்கும் இருந்தது என்ற கருத்து நிலவுகிறது.

பனிப் போர் காலத்தில் ரஷ்யாவை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் கூட்டமைப்பான, சோவியத் ஒன்றியத்துக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இறுக்கமான இராணுவ, வணிக உறவுகள் இருந்தன. கருத்தியல் வழியிலும், தந்திரோபாய காரணங்களாலும் இந்த நெருக்கமான உறவு பேணப்பட்டது.

1991இல் சோவியத் ஒன்றியம் சிதறிய பின்னர், முதலாளித்துவ நாடாக உருவெடுத்த ரஷ்யாவுடன் வட கொரியாவின் வணிக உறவுகள் சுருங்கிப் போயின.

வட கொரியா சீனாவின் பக்கம் சாய்ந்து அதனை தமது முக்கிய கூட்டாளியாக ஆக்கிக்கொண்டது. புடின் தலைமையின் கீழ் பொருளாதார ரீதியில் ரஷ்யா மீண்டெழுந்தது. அதன் பின்னர் 2014இல் சோவியத் காலத்தில் வட கொரியா வாங்கிய கடன் முழுவதையும் நல்லெண்ண நடவடிக்கையாக ரஷ்யா தள்ளுபடி செய்தது.

Fri, 04/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை