கைதாவதை தவிர்ப்பதற்கு பெரு முன்னாள் ஜனாதிபதி தற்கொலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு பொலிஸார் வீட்டுக்கு வந்ததை அடுத்து பெரு நாட்டு முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது மரணத்தை தற்போதைய ஜனாதிபதி மார்டின் விஸ்காரா உறுதி செய்துள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியில் கூடிய நிலையில் பொலிஸார் அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.

பிரேசில் கட்டுமான நிறுவனமான ஒடேபிரச்சில் இருந்து இலஞ்சம் பெற்றதாக கார்சியா மீது குற்றம்சாட்டப்படுவதோடு, அதனை அவர் மறுத்து வந்தார்.

கார்சியா 1985 தொடக்கம் 1990 வரையும் மீண்டும் 2006 தொடக்கம் 2011 வரையும் பெரு நாட்டு ஜனாதிபதியாக இருந்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரை கைது செய்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பொலிஸார் வந்ததை அடுத்து தாம் தொலைபேசி அழைப்பொன்றை பெற வேண்டி இருப்பதாக அவர்களிடம் கூறிவிட்டு கார்சியா அறை ஒன்றுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டதாக உள்துறை அமைச்சர் கார்லொஸ் மொரான் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். சில நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கார்சியா இருக்கையில் அமர்ந்தபடி தனது தலையில் சுட்டுக்கொண்ட நிலையில் இருந்துள்ளார்.

கார்சியா தனது இரண்டாவது தவணைக்காலத்தில் தலைநகரில் சுரங்க ரயில் பாதை அமைப்பது தொடர்பில் ஒடேபிரச் நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் பெற்றதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது. 2004 தொடக்கம் பெருவில் சுமார் 30 மில்லியன் டொலர் இலஞ்சமாக வழங்கியதை ஒடேபிரச் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.

எனினும் தான் அரசியல் பழிவாங்கலுக்கு முகம்கொடுத்திருப்பதாக தொடர்ந்து கூறிவந்த கார்சியா கடந்த ஆண்டு உருகுவேயில் அரசியல் தஞ்சம் கோரியபோதும் அது வெற்றியளிக்கவில்லை.

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை