வடக்கு அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் மக்கள் முப்படையுடன் நெருக்கம்

முப்படையை பலவீனப்படுத்த  இடமளிக்க மாட்டேன்

வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் என்ன கூறினாலும் பொதுமக்கள் முப்படையுடன் நெருக்கமாவே இருக்கிறார்கள். முப்படையை பலவீனப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப அரச காணிகள் ஒருபோதும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் ,மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலைவிவாதத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கொலன்னாவை குப்பை பிரச்சினையையடுத்து அறுவைக்காட்டில் வெளிநாட்டு உதவியுடன் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம். இவ்வாறான திட்டம் முன்னெடுக்கப்படும் போது அப்பிரதேச மக்களின் எதிர்ப்பு வரும். நாட்டில் எப்பகுதியில் இவ்வாறான திட்டம் செயற்படுத்தப்படும் போதும் பிரதேச மதத் தலைவர்களின் தலைமையில் போராட்டம் நடைபெறும். முழுநாட்டிலும் காணப்படும் குப்பை பிரச்சினை தொடர்பில் அராங்கம் பொதுவான கொள்கையை முன்னெடுக்க வேண்டும். இவற்றின் போது ஒரு தரப்பு எதிர்த்தாலும் நாட்டுக்காக முடிவு எடுத்து செயற்படுத்த வேண்டும். குப்பை முகாமைத்துவம் உள்ளூராட்சி சபைகளின் கீழே வருகிற ​போதும் அதற்கு தேவையான இயந்திரங்கள் உள்ளூராட்சி சபைகளிடம் கிடையாது.

இந்த வருட இறுதிக்குள் உமா ஓயா திட்டம் நிறைவு செய்யப்படும்.மகாவலி காணிகள் அரசியல் ரீதியில் பகிர்ந்தளிக்கப்படுவதாக சிலர் குற்றஞ்சாட்டினார்கள்.காணி அற்றவர்களுக்கு காணி வழங்குகையில் கட்சி ரீதியில் செயற்பட முடியாது. அமைச்சர்களுக்கோ எம்.பிக்களுக்கோ தேவையானவாறு பட்டியல் தயாரிக்கப்படுவதில்லை. முப்படையினர் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றுகின்றனர். வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் என்ன கூறினாலும் பொதுமக்கள் எமது முப்படையுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அங்கு வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது முப்படையினர் தான் அவர்களுக்கு உதவி வழங்கினார்கள்.முப்படையை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டேன்.

கடற்படைக்கு கப்பல் குறைபாடும் விமானப் படைக்கு விமான தட்டுப்பாடும் இருக்கிறது. முப்படைக்கு தொழில்நுட்ப அதிகாரிகளை சேர்த்துக் கொள்வதால் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும்.

பொலிஸ் திணைக்களமும் அதன் கீழுள்ள விசேட அதிரடிப்படையும் முக்கிய பங்காற்றி வருகிறது.போதைப்பொருளை ஒழிக்க அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பாராட்டும் விருதும் வழங்கி வருகிறோம். பொலிஸை விமர்சிப்பதோ கௌரவக் குறைவாக நடத்துவதோ உகந்ததல்ல. பொலிஸார் 12 மணி ​நேரம் உணவின்றி பட்டினியாக செயற்படுகிறார்கள். பொலிஸ் சேவையை மாற்ற வேண்டும். எனது இராஜாங்க அமைச்சர்களாக இருக்கும் அஜித் மான்னப்பெருமவும் ருவன் விஜேவர்தனவும் சிறந்த நேர்மையான அமைச்சர்களாவர். எனது கொள்கைகளுக்கு உகந்தவர்களான அவர்கள் இருவரையும் கஷ்டப்பட்டு தேடி எடுத்தேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை