அநியாய உயிரிழப்புகளுக்காக மன்னிப்பு கோருகிறோம்

பொலிஸ் மாஅதிபர் பதவி விலக வேண்டும்

புலனாய்வு அறிக்ைகயை மதித்திருந்தால் நாசகார செயற்பாட்டை தவிர்த்திருக்கலாம்

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என 17 நாட்களுக்கு முன்னரே சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் முன்வைத்த எச்சரிக்கையை உயர்மட்ட பாதுகாப்புத் தரப்பினர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பாரிய நாசகார செயற்பாட்டைத் தவிர்த்திருக்க முடியும் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

பாரிய அழிவுகளுக்குப் பொறுப்பேற்று பொலிஸ்மா அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரைப் பதவி விலக்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச தொடர்புகளைக் கொண்ட உள்ளூரைச் சேர்ந்தவர்களே இந்தத் தொடர் குண்டு வெடிப்புக்களை மேற்கொண்டுள்ளனர். அநியாயமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கோருவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு பாதுகாப்பைப் பலப்படுத்த சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அலரிமாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, மனோ கணேசன், திகாம்பரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன,

ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதன் முதலில் சர்வதேச புலனாய்வாளர்கள் இலங்கையில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரித்திருந்தனர். அதன் பின்னர் 9ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை இது பற்றி சமர்ப்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் திகதி புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரபுக்களின் பாதுகாப்புத் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவு, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புப் பிரிவு எனப் பல பிரிவுகளுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ள போதும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு எந்தவித அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இவ்வாறான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது பற்றி பிரதமருக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்றார்.

ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின் பின்னர் பிரதமர் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. இதனால் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து எதுவும் அவருக்குத் தெரியாது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் பிரதமர் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையை பிரதமர் கூட்டுவதற்கு முயற்சித்தார். அலரி மாளிகையில் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தபோதும் அவர்கள் அங்கு வர மறுத்துவிட்டனர். இந்த நிலையில் பிரதமர் தானாக பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்றார். அங்கு சென்ற பின்னரும் சுமார் 20 நிமிடங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அறையிலேயே காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. அதன் பின்னரே பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை நடத்தி உரிய ஆலோசனைகளை பிரதமர் வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது பாதுகாப்புச் சபையினரை சந்திக்க வேண்டும் என அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய பிரதமர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். எனினும் அவர்கள் அலரிமாளிகைக்கு வர மறுத்துவிட்டனர்.

உயர்மட்டத்திலிருந்து தமக்குக் கிடைத்த பணிப்புரைக்கு அமையவே தாம் செயற்படுவதாக அவர்கள் கூறியதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.

இருந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் காலை (நேற்று) மீண்டும் பாதுகாப்புச் சபை கூடியது. இதில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரும் கலந்துகொண்டனர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

தொடர்குண்டுத் தாக்குதல்களை உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் உள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படப்போவதாகவும் அதனுடன் தொடர்புபட்டவர்கள் பற்றிய பெயர் விபரங்களுடன் முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குண்டுகள் வெடிக்கவைக்கப்பட முன்னர் 10 நிமிடங்களுக்கு முன்னரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதுவாக இருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் கூட்டுப்பொறுப்பேற்று இந்தச் சம்பவங்களின் பின்னணில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கோருவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறலாமலிருப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன உறுதிமொழி வழங்கினார்.

இச்சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பொலிஸ்மா அதிபர் பதவி விலகவேண்டும். இல்லாவிட்டால் அவரைப் பதவி விலக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை