நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி வெற்றி

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் விளையாட்டுத்துறைப் பிரிவு ஏற்பாடு செய்த நீர்கொழும்பு வலையப் பிரிவிலுள்ள அரச பாடசாலைகளுக்கு இடையேயான ஒரு நாள் புட்ஸால் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நீர்கொழும்பு, பெரியமுல்ல அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் 14 வயதுக்கு கீழ்ப்பட்ட உதைபந்தாட்ட அணி சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.

நீர்கொழும்பு, குறன புட்ஸால் மைதானத்தில் மேற்படி சுற்றுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) மின்னொளியில் நடைபெற்றது.

12 அரச பாடசாலைகள் பங்குபற்றிய மேற்படி சுற்றுப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நீர்கொழும்பு சென். மேரீஸ் கல்லூரி அணியை எதிர்த்தாடிய அல் - ஹிலால் மத்திய கல்லூரி அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. அல்-ஹிலால் மத்திய கல்லூரி அணியின் எம். றஹ்மதுல்லா தனது அணிக்காக கோலொன்றை பெற்றுக் கொடுத்தார்.சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற அல்-ஹிலால் அணிக்கு மேல் மாகாண சபையின் உறுப்பினர் எம்.எஸ்‌. சகாவுல்லா 25 ஆயிரம் ரூபா பணப் பரிசையும் மற்றும் சம்பியன் கிண்ணத்தையும் வழங்கினார். நீர்கொழும்பு, அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளராக நீர்கொழும்பு லீக் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பீ. விஜயகுமார் கடமையாற்றி வருகின்றார்.

நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய உதைபந்தாட்ட லீக்கின் மத்தியஸ்தர்கள் குறித்த சுற்றுப் போட்டியில் மத்தியஸ்தர்களாக கடமையாற்றினர்.

நீர்கொழும்பு தினகரன் நிருபர்

 

Sat, 04/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை