கிழக்கு கல்விப் பணிப்பாளர் இடமாற்ற தடை நீடிப்பு

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரை இடமாற்றம் செய்து புதிய பணிப்பாளரை நியமித்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தடையுத்தரவை தொடர்ந்தும் நீடித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய தம்மை எந்தவிதமான காரணங்களுமின்றி இடமாற்றம் செய்துள்ளதாகவும் அதற்கு தடையுத்தரவு விதிக்க வேண்டும் எனவும் கோரி மன்சூர் திருகோணலை மேல் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அத்துடன் இவ்வழக்கில் எதிரிகளாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலர் கிழக்கு மாகாண ஆளுநர் சட்டமாதிபர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தன. 

குறித்த வழக்கானது இதற்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கை விசாரணை செய்த நீதிபதி கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு இடைக்கால தடையுத்தரவு விதித்தும் முன்னைய கல்விப் பணிப்பாளரையே தொடர்ந்தும் கடமையாற்றுமாறும் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட போது கிழக்கு மாகாண ஆளுநர் சார்பாக சட்டமா அதிபர் திணைக்கள அரச சட்டவாதி பிரந்தா குணரட்னம் முன்னிலையாகியிருந்தார். 

இதன்போது தமது தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய திகதி தருமாறு மன்றை கோரினார். அதேநேரம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை நீடித்து கட்டளையிடுமாறும் மன்றைக் கோரினார். 

இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த மன்றானது ஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை நீடித்து முன்னைய கல்வி பணிப்பாளரான மன்சூரினையே கடமையாற்றுமாறு உத்தரவிட்டது.

மேலும் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டு திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார். 

(ரி. விருஷன்) 

Thu, 04/04/2019 - 15:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை