ஊடக சுதந்திரத்தை மிக பற்றுறுதியுடன் பயன்படுத்துங்கள்

அரசியலும் ஊடகத்துறையும் பிரிந்து செயற்படுவது நாட்டுக்கு ஆபத்து

ஜனாதிபதி ஊடக விருதின் ஆரம்ப கர்த்தா அமைச்சர் மங்கள

நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடுகளும் அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களுக்கிடையே பிளவுகளிருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பொருத்தமாக அமையாதென்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இங்கு பேசிய அவர் விமர்சனங்களைப் போன்றே கலந்துரையாடல்கள் கருத்தாய்வுகளும் சிறந்த சமூகத்துக்கு அவசியமாகின்றது.

பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக தமக்கெதிரான கருத்துக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு செய்வதனூடாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை விட முற்றிலும் மாறுபட்ட விடயங்களையும் சந்திக்க நேரிடலாம்.

பல்வேறு அவதூறான கருத்துக்களை தமக்கு எதிராக தெரிவித்துவரும் நிலையிலும் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பெரிதும் மதிக்கின்ற தலைவர் என்ற வகையில் அமைதியாக உள்ளேன். மாற்றத்தினூடாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் இவ்வாறு அமைதியாக இருக்காது என்பதை கடந்த சில தசாப்தங்களாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் அனுபவங்களூடாகப் புரிந்து கொள்வது சிரமமானதல்ல. ஒழுக்கமான சமூகத்தை நோக்கிய பயணத்திற்கு பலமாக செயற்படுவதே ஊடகங்களின் பொறுப்பாகும். பற்றுறுதி வழங்குதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதபதி, மீண்டும் அவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக விருதினை வழங்குவதற்கான ஆரம்ப கர்த்தாவாக தற்போதைய நிதி அமைச்சரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான மங்கள சமரவீரவே செயற்பட்டிருந்தார். அவரது அர்ப்பணிப்பின் காரணமாகவே இலங்கையில் ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக ஊடகத்துறைக்கான விருது வழங்கப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறந்த ஊடகவியலாளர்கள் நால்வருக்கு “இலங்கை ஊடக அபிமானி” ஜனாதிபதி விருதுகள் ஜனாதிபதியால் இதன்போது வழங்கப்பட்டன. சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச பத்திரிகை துறைக்காகவும் பிரபல ஊடகவியலாளர் கருணாரத்ன அமரசிங்க வானொலி ஊடகத்துறைக்காகவும் லூஷன் புலத்சிங்கள தொலைக்காட்சி ஊடகத் துறைக்காகவும், லக்ஷ்மன் ஜயவர்தன இணையத்தள துறைக்காகவும் ஊடக அபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஊடக விருது விழாவுடன் இணைந்ததாக வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்ட நூலும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வெகுசன ஊடக த்துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர மற்றும் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Thu, 04/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக