'விக்கிலீக்ஸ்'ஜுலியன் அஸாஞ்ச் லண்டனில் கைது

இரகசிய தகவல்களை வெளியிடும் விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் இணை நிறுவுனர் ஜுலியன் அஸாஞ்ச் லண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழு வருடங்கள் ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த இவரை லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸ் சேவை அதிகாரிகள் தூதரகத்துக்குள் சென்று கைதுசெய்தனர். பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு அஸாஞ்ச் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்வடோர் தூதரகத்தில் அடைக்கலம் பெற்றிருந்தார்.

அஸாஞ்ச் சர்வதேச கடப்பாடுகளை தொடர்ச்சியாக மீறுவதாக குற்றம்சாட்டிய ஈக்வடோர் ஜனாதிபதி லெனின் மொரேனோ அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதுவரின் அழைப்பையேற்று உட்சென்று அஸாஞ்சை கைதுசெய்ததாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தஞ்சம் கொடுத்திருந்த ஈக்வடோர் நாட்டுக்கும் அஸாஞ்சுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியதன் வெளிப்பாடே இந்தக் கைதுக்கு காரணம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஈக்வடோர் ஜனாதிபதி லெனின் மொரினோவின் தனிப்பட்ட வாழ்க்கை தகவல்களை அஸாஞ்ச் கசியச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அஸாஞ் தஞ்சம் பெறுவதற்கான நிபந்தனையை மீறியிருப்பதாக மொரினோ கூறியிருந்தார்.

சித்திரவதைக்குட்படுத்தப்படும் அல்லது மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாட்டுக்கு அஸாஞ்ச் ஒப்படைக்கப்படமாட்டார் என்ற உத்தரவாதத்தை பிரிட்டனிடம் பெற்றிருப்பதாகவும் ஈக்வடோர் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் எழுத்துமூல உத்தரவாதத்தை ஈக்வடோருக்கு வழங்கியுள்ளது.

எனினும், ஈக்வடோர் சட்டவிரோதமான முறையில் அஸாஞ்சின் அரசியல் தஞ்சத்தை இடைநிறுத்தியிருப்பது சர்வதேச சட்டத்தை மீறும் வகையிலானது என விக்கிப்பீடியா குற்றஞ்சாட்டியுள்ளது.

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் இணை நிறுவுனர் அஸாஞ், பல நாடுகளின் முக்கிய தகவல்கள், நாடுகளுக்கிடையில் பரிமாற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை இரகசியமாகக் கசிய விட்டிருந்தார். இதனால் அவருக்குப் பல நாடுகளிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை