கண்டி அணியுடனான இறுதிப் போட்டிக்கு சந்திமாலின் கொழும்பு அணி முன்னேற்றம்

இலங்கை மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட லசித் மாலிங்க தலைமையிலான காலி மற்றும் தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நான்கு அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் தனது இரண்டாவது வெற்றிகளை பெற்றே இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தை தேர்வு செய்யும் நோக்குடன் குறுகிய காலத்திற்கு நடைபெறும் இந்தப் போட்டித் தொடரில் கடந்த சனிக்கிழமை கொழும்பு அணி கண்டி அணியை எதிர்கொண்டது.

பல்லேகல சர்வதேச மைதமானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியின் ஆரம்ப விக்கெட்டுகள் ஒற்றை இலக்கங்களுக்கே வெளியேறின. அவிஷ்க பெர்னாண்டோ 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததோடு உபுல் தரங்க 1 ஓட்டத்துடன் வெளியேறினார்.

எனினும் மத்திய வரிசையில் வந்த ஷெஹான் ஜயசூரிய அபாரமாக துடுப்பெடுத்தாடி சதம் ஒன்றை பெற்றதன் மூலம் அணியின் ஓட்டங்களை அதிகரித்தார். 133 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 9 பெளண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 115 ஓட்டங்களை பெற்ற நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

இதன் போது ஜயசூரிய மத்திய பின் வரிசையில் வந்த சகலதுறை வீரர் அஞ்செலோ பெரேராவுடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். வேகமாக துடுப்பெடுத்தாடிய பெரேரா 82 பந்துகளில் 84 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் கொழும்பு அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணி முதல் விக்கெட்டை 7 ஓட்டங்களில் இழந்தபோதும் மறுமுனையில் இருந்த அணித்தலைவர் திமுத் கருணாரத்ன சங்கீத் குரேவுடன் இணைந்து 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார். எனினும் திமுத் கருணாரத்ன 44 ஓட்டங்களுடனும், சங்கீத் குரே 82 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்த பின் கண்டி அணி சற்று தடுமாற்றம் கண்டது.

இந்நிலையில் 39 ஓவர்கள் முடிவில் கண்டி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போதி வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. போட்டியை தொடர முடியாமல் குறித்த ஓவர்கள் முடிந்த நிலையில் கண்டி அணி 209 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது. எனினும் அந்த அணி அந்த இலக்கை எட்டாததால் டக்வத் லுவிஸ் முறைப்படி தோல்வியை சந்தித்தது.

இதேவேளை ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தம்புள்ளை அணியை காலி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட காலி அணிக்கு லஹிரு திரிமான்ன மற்றும் தனஞ்சய டி சில்வா முறையே 82 மற்றும் 89 ஓட்டங்களை பெற்று வலுச் சேர்த்தனர். தொடர்ந்து மத்திய வரிசையில் மலிந்த சிறிவர்தன 44 பந்துகளில் 65 ஓட்டங்களை விளாசினார்.

இதன்மூலம் காலி அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 345 ஓட்டங்களை பெற்றது.

பதிலெடுத்தாட களமிறங்கிய அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான தம்புள்ளை அணி 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுளையும் இழந்து 296 ஓட்டங்களை பெற்றது.

சிறப்பாக ஆடிய மத்தியூஸ் 78 ஓட்டங்களை பெற்றார்.

இந்த மாகாண மட்டத் தொடரின் இறுதிப் போட்டி வரும் வியாழக்கிழமை தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.

 

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை