வடகொரிய-ரஷ்ய தலைவர்கள் முதல்முறை சந்திக்க ஏற்பாடு

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ரஷ்யா பயணம் மேற்கொண்டு முதல் முறை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவிருப்பதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்புக்கான திகதி அந்த அறிவிப்பில் வெளியிடப்படாதபோதும் இரு தலைவர்களும் எப்ரல் மாதம் இரண்டாவது பாதியில் சந்திப்பதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவுக்கு தீர்க்கமான இந்த தருணத்தில் இரு பழைய கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வட கொரியாவின் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் கடந்த பெப்ரவரியில் முறிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் கிழக்கு நகரான விளாடிவொஸ்டொக்கில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சந்திப்பில் இரு தரப்பும் வெவ்வேறு நோக்கங்களுடன் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் உதவிகள் மூலம் வட கொரியாவின் பிரதான கூட்டணி நாடான சோவிட் ஒன்றியம் இருந்தது. வட கொரியாவுக்கு ஆரம்பக் கட்ட அணு சக்தி செயற்பாடுகளையும் சோவியம் ஒன்றியமே அறிமுகம் செய்தது.

எனினும் சோவியட் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரு தரப்பு உறவில் முறிவு ஏற்பட்டது.

வட கொரியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கடைசியாக 2011 ஆம் ஆண்டே இரு தரப்பு சந்திப்பு இடம்பெற்றது.

கிம்மின் தந்தையான மறைந்த கிம் ஜொங் இல் மற்றும் அப்போதைய ரஷ்ய ஜனாதிபதி ட்மிட்ரி மெட்வெடெவ் அப்போது சந்தித்துக் கொண்டனர்.

ரஷ்யாவின் முக்கியத்துவம் வாய்ந்த விளாடிவொஸ்டொக் துறைமுகத்திற்கு நெருக்கமாக இரு நாடுகளும் எல்லைகளை பகிர்ந்துகொள்ளும் நிலையில் இந்த சந்திப்பு பூகோள ரீதியான நோக்கங்களை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சின் தகவல்படி, வட கொரியாவின் சுமார் 8,000 புலம்பெயர் தொழிலாளர்கள் ரஷ்யாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இது வட கொரிய பொருளாதாரத்தில் முக்கிய வருவாயை தருவதாக உள்ளது. எனினும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூறப்பட்டதை விடவும் மிக அதிகம் என்று ஏனைய கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

எனினும் தற்போதைய ஐ.நா தடைகளின்படி இந்த ஆண்டு இறுதியில் இந்த தொழிலாளர்கள் தமது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த விவகாரத்தில் இதுவரையில் உறுதியான உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு புத்துயிரூட்டவும், சீனாவுக்கு எதிர் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய தேவையும் கிம் ஜோங் உன்னுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை