கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் ஒன்பதாவது இடத்திலேயே உள்ளது

ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுக்கு வராதவரை,இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பமுடியாது. அது தொடர்பான முடியுமான பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். 

அக்கரைப்பற்று அயினா பீச் வியூ காடன் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அயினா பீச் வியூ காடன் பிரதம நிறைவேற்றதிகாரி எம்.ஐ.அஜ்மீர் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, -மீண்டும் எமது நாட்டை ஒரு யுத்தத்திற்கு கொண்டு செல்ல முடியாது. நாங்கள் இன்று சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் வட, கிழக்கை இணைப்பதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க முடியாது. அதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். எவ்வித சூழ் நிலைகளிலும் அவ ற்றை நாங்கள் அனுமதிக்க முடியாது. இனங்களுக்கிடையில் ஓர் புரிணந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.  

முடியுமான காணிப்பிரச்சினைகளை தீர்த்துவைக்க தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதியின் வேண்டுகோளிற்கிணங்க புதிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கவுள்ளோம்.

ஆளுநருக்கு உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி முடியுமான சகல பிரச்சினைகளையும் இன முறண்பாடுகளை களைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்க்கிறோம்.  

கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில்  கிழக்கு மாகாணம் 09வது இடத்தில் இருக்கிறது.  ஆகவே இதனை நாங்கள் மாற்ற வேண்டிய தேவை உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான அத்திவாரத்தை இடவேண்டியுள்ளது. கல்வியிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. கிழக்கு மாகாண கல்வித் துறையிலே பல அதிகாரிகள் கடமையாற்றுகின்ற போதிலும் ஒரு மாற்றத்தையும் காணவில்லை.

சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர் ஒருவரை புல்மோட்டைக்கு மாற்றியிருக்கிறார்கள் இதனால் எவ்வாறு கல்வியில் மாற்றம் ஏற்படும்? சரியான திட்டமிடல் இல்லாமல் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு சரியான தீர்மானங்களை எடுத்துள்ளோம். சுகாதாரம், கல்வி, உள்ளூராட்சி போன்ற நிருவாகத் துறைகளில் புதிய மாற்றங்களை கொண்டுவரவுள்ளோம். 

எங்களிடத்தில் இருக்கும் பிரச்சினைகளை நாம் தீர்க்காமல் ஒற்றுமை பற்றிப் பேச முடியாது. இது போன்ற நிறைய பிரச்சினைகள் இருக்கும் போது நாங்கள் இரண்டு சமூகமும் பேச வேண்டும். பேசி முடியுமானவரை ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து புரிந்துணர்வோடு நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வராதவரை இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

ஒரு சிறந்த ஆட்சியை கொண்டுவர வேண்யிருக்கிறது. அந்த ஆட்சியின் ஊடாக எங்களுடைய பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு காணவேண்டியிருக்கிறது. இன்னும்  ஏமாறும் ஒரு சமூகமாக இருக்க முடியாது.

இதனை சகல அரசியல் தலைமைகளும் உணர்ந்து செயற்படவேண்டும் என்றார்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)   

Thu, 04/04/2019 - 16:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை