பயங்கரவாதிகளை தேடிப்பிடிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்

பெரியநீலாவணை விசேட, நற்பிட்டிமுனை விசேட நிருபர்கள்

பயங்கரவாதிகளை தேடிப் பிடிப்பதற்கு முஸ்லிம் மக்களுடைய பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என

உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத்திட்ட பகுதியில் (26) இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (28) கல்முனை மாநகர சபை முதல்வர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்து கருத்து தெரிவித்த அவர்,

தற்போது பிரதேசம் எங்கும் முஸ்லிம் மக்கள் அச்சமடைந்து வீடுகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். முஸ்லிம் மக்கள் ஒருபோதும் தீவிரவாதத்தையோ பயங்கரவாதத்தையோ அனுமதிக்கவில்லை.இதனால் தான் இங்கு சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருந்தவர்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தார்கள். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளி ஊர்களில் இருந்து இங்கு வந்து வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.

தற்போது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மக்கள் தங்கவைக்கப்பட்டு வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. தற்போது அவர்கள் சொந்த வீடுகளுக்கு திருப்பியனுப்பப் பட்டுள்ளனர்.

இலங்கையில் இரண்டு வருடமாக இந்தப் பயங்கரவாதிகளின் பெயர் வீசப்பட்டது. ஆனால் இவ்விடயத்தில் நமது நாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டனர். இன்று பாரிய நெருக்கடிக்கு அரசாங்கமும் நாட்டு மக்களும் முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இருந்த போதும் எமது இராணுவத்துக்கு எமது நாட்டு முஸ்லிம் மக்கள் விசுவாசமாக இருந்து இந்த பயங்கர வாதிகளை ஒழிப்பதில் ஆதரவளித்து வருகின்றனர் .

சம்மாந்துறையில் பாரிய ஆயுத கிடங்கு, சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குத்தலுக்கு தயாரானவர்கள் அழிக்கப்பட்டமை,நிந்தவூரில் வெடிபொருள் உற்பத்தி செய்யும் இடம் போன்ற இடங்களை அப்பகுதி முஸ்லிம் மக்களே இராணுவத்துக்கு தகவல் வழங்கி அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர் .

அண்மையில் சர்வதேச பயங்கர வாதிகளின் தாக்குதல் நடை பெற்றபின்பு அவை தொடராமல் தடுக்கப்படுவதற்கு முஸ்லிம் மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என இராணுவ தளபதி கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிலர் அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபடுகின்றனர் .

எதிர்காலத்தில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த நாட்டில் அமுல்படுத்தப்படும் சட்டங்களுக்கு நாம் மதிப்பளித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் ."புர்கா" விடயமாக இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுவான முடிவை எடுத்துள்ளது. இதனை எமது முஸ்லிம் சகோதரிகள் முன்னெடுத்து தேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்.

Mon, 04/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை