உச்ச நீதிமன்றில் விளக்கம் கோர சுதந்திர கட்சிக்குள் ஆலோசனை

19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டுடனா? அல்லது 2020ஆம் ஆண்டிலா? முடிவடைகின்றதென மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது தொடர்பில் ஆலோசித்துவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி 19ஆவது திருத்தச்சட்டத்தில் கையழுத்திட்டு சபாநாயகர் அங்கீகாரம் அளித்திருந்தார். சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் 5 வருடங்கள்தான் பதவிவகிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் கடந்த 2017ஆம் ஆண்டு பிற்பாதியில் தமது பதவிக்காலம் ஆறு ஆண்டுகளா? அல்லது ஐந்து ஆண்டுகளா? என்று ஜனாதிபதி சட்ட மாஅதிபரிடம் விளக்கம் கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஐந்து வருடங்கள்தான் ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்க முடியுமென உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு பதிலளித்திருந்ததாகவும் அத்தருணத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மற்றும் சில சட்டத்தரணிகள் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமொன்று முன்னோக்கியே பாயுமென்றும் பின்நோக்கிப் பாயாது என்றும் விளக்கம் அளித்திருந்தனர். இவ்வாறான பின்புலத்தில்தான் ஜனாதிபதி மீண்டும் தமது பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி கூறியுள்ளார். கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் சுட்டிக்காட்டியதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பில் மீண்டும் பேச்சுகள் எழுந்துள்ளன. இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் முன்னோக்கியே பாயும். ஒருபோதும் பின்னோக்கிப் பாயாது. 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம்தான் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறெனின் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஜனாதிபதி பதவி வகிக்க முடியும். அரசியலமைப்புக்கான விளக்கத்தை அளிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடம் மாத்திரமே உள்ளது.

தற்போது நீதிமன்றங்களின் விடுமுறைக் காலமாகவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை உள்ளதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் முதலில் பாராளுமன்றத் தேர்தல்தான் நடைபெறும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி வசமாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை