மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்க நெதன்யாகு வாக்குறுதி

இஸ்ரேல் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வாக்குறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேலில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதோடு மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதற்கான ஆதரவைக் கொண்ட வலதுசாரி கட்சிகளுடன் நெதன்யாகு போட்டியிடுகிறார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாகும். 1967 யுத்தத்தில் சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்த கோலன் குன்று பகுதியில் இஸ்ரேலின் இறைமையை அமெரிக்கா கடந்த மாதம் அங்கீகரித்திருந்தது.

மேற்குக் கரையில் இஸ்ரேலின் சுமார் 400,000 யூதக் குடியேற்றங்களும் மற்றொரு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான கிழக்கு ஜெரூசலத்தில் சுமார் 200,000 குடியேற்றவாசிகளும் வாழ்ந்து வருகின்றனர். மேற்குக் கரையில் சுமார் 2.5 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் மற்றும் காசாவை உள்ளடக்கிய நாடு ஒன்றை உருவாக்க பலஸ்தீனர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

யுூதக் குடியேற்றங்கள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினையில் சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது. இந்த குடியேற்றங்கள் தமது எதிர்கால தனிநாட்டுக்கான சாத்தியத்தை இல்லாமலாக்குவதாக பலஸ்தீனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நெதன்யாகு மேற்குக் கரையில் மிகப்பெரிய குடியேற்றத்தில் இஸ்ரேலிய இறைமை நிறுவப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். “அடுத்த கட்டத்திற்கு நகர்வது பற்றி நீங்கள் கேட்கின்றீர்கள். ஆம், அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்” என்று அவர் உறுதியாக குறிப்பட்டார். “நான் இஸ்ரேலின் இறைமையை நீடிக்கப்போகிறேன், குடியேற்ற பகுதிகள் மற்றும் தனிப்பட்ட குடியேற்றங்களை நான் வேறுபடுத்தப்போதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி தரும் ஒன்று அல்ல என்று பலஸ்தீன மூத்த அதிகாரியான சயெப் எரகத் குறிப்பிட்டுள்ளார். “சர்வதேச சமூகம் இஸ்ரேல் தொடர்பில் பாராமுகமாக இருக்கும்போது, குறிப்பாக இஸ்ரேலினால் பலஸ்தீனர்களின் மனித உரிமை மீறப்படும்போது டிரம்ப் நிர்வாகம் அதரவு மற்றும் ஒப்புதல்களை அளிக்கும்போது இஸ்ரேல சர்வதேச சட்டங்களை தொடர்ந்து மீறும்” என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் எந்த ஒரு அறிவிப்பும் நடவடிக்கையும் உண்மையை மாற்றாது என்று குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர், குடியேற்றங்கள் சட்டவிரோதம் என்றும் அவை அகற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி, புதிய மைய வலதுசாரி நீலம் மற்றும் வெள்ளை கூட்டணியிடம் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது.

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை