மரண தண்டனையால் போதைப்பொருள் பாவனை குறைந்ததாக ஆதாரம் இல்லை

சர்வதேச நாடுகள் மீண்டும் அதிருப்தி 

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.  

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதனால் போதைப்பொருள் பயன்பாடு குறைந்தமை தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் இல்லையென்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா மற்றும் பிரித்தானியா ஆகிய ஐரோப்பிய நாடுகளும், நோர்வே, சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயங்களும் இது தொடர்பில் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.  

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற 73ஆவது ஐக்கிய நாடுகள் பொது ஒன்று கூடலில் மரண தண்டனைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அந்நாடுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.  

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.  

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் 43 வருட காலமாக பின்பற்றப்படாமலிருந்த மரண தண்டனை விதிப்பு முறையை இலங்கை அரசாங்கம் மீள ஆரம்பிக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம் என்பது கடுமையான சவாலாக அமைந்துள்ளது என்பதை நாம் அறிந்துள்ளதுடன், சட்டவிரோதமான போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாகும்.  

இருந்த போதிலும் மரண தண்டனையை அமுலாக்குவதனூடாக இதனை கட்டுப்படுத்தலாம் என்பதற்குப் போதியளவு ஆதாரங்கள் இல்லை. போதைப் பொருட்கள் கொண்டுள்ள ஆபத்தை தணிப்பதற்கு எமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நாம் தயாராகவுள்ளோம்.  

பரவலான சட்ட கட்டமைப்புக்களையும், பாரம்பரியங்களையும், கலாசாரங்களையும் சமய பின்புலங்களையும் கொண்டுள்ள உலகின் மூன்றில் இரண்டுக்கு அதிகமான நாடுகள், மரண தண்டனையை இல்லாமல் செய்துள்ளன அல்லது அதனை பின்பற்றுவதில்லை. மரண தண்டனையைானது மனித விழுமியம் மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் தவிர்ப்பதாக அமைந்துள்ளது என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(மகேஷ்வரன் பிரசாத்) 

Tue, 04/09/2019 - 08:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை