நாடெங்கும் தீவிர தேடுதல்; முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு

தேடப்பட்டு வந்த அறுவரும் அடையாளம் காணப்பட்டனர்
சந்தேகத்தில் கைதான 59 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் 09 பெண்கள் உள்ளிட்ட 59 பேர் குற்றப்புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்களென புகைப்படங்களுடன் தேடப்பட்டு வந்த ஆறு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பயங்கரவாதிகளையும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களையும் அடையாளம் காண்பதற்கும் கைது செய்வதற்கும் முஸ்லிம் சமூகத்தவர்கள் பெரும் பங்களிப்புச் செய்துவருவதாக சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு முஸ்லிம்கள் வழங்கிய தகவலுக்கமையவே சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்த பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் நேற்று (29) வரை குற்றப்புலனாய்வு பிரிவினரால் 44 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர். அதில் 07 பேர் பெண்கள். அதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 15 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் இருவர் பெண்கள்," என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அடிப்படை பயங்கரவாத அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்பு டையவர்களென தெரிவித்து மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் தேடப்பட்டு வந்தனர். அவர்களுள் எட்டு குண்டுவெடிப்புத் தாக்குதலினதும் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மிக நெருங்கிய சகாக்களான மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவரும் கம்பளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை தேடப்பட்டு வந்த பாத்திமா லத்தீபா மாவனல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மொஹமட் சாதிக் அப்துல்ஹக் என்பவரின் மனைவியாவார்.

அப்துல் காதர் பாத்திமா சாதியா அல்லது சித்தியா எனும் பெயரில் தேடப்பட்டு வந்த பெண் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரென்றும் அவர் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐந்தாவது மற்றும் ஆறாவது சந்தேக நபர்களான புலஸ்தீனி ராஜேந்திரன் (சாரா) மற்றும் மொஹமட் காசிம் மொஹமட் றில்வான் ஆகிய இருவரும் சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்திருக்க வேண்டுமென பாதுகாப்பு தரப்பு நம்புகின்றபோதும் அதனை உறுதிபடுத்துவதற்காக டி.என்.ஏ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது அனல் மின்நிலையம் முழுமையாக கடற்படையினரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார நேற்று தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியை மறுத்த அவர், அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். அத்துடன் கடற்படையினர் கொழும்பில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான மூவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களின் ஒருவரிடம் 10 அடையாள அட்டைகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் யாழ்ப்பாணத்திலும் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான எழுத்து ஆவணங்களுடன் நால்வரை கைது செய்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கார், 02 மோட்டார் சைக்கிள்கள், ஒரு முச்சக்கரவண்டி என்பவற்றுடன், மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்படையினர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான புனித அந்தோனியார் தேவாலயத்தை சுத்திகரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதனை அவர் உறுதி செய்தார்.

ஏக்கல பிரதேசத்திலுள்ள 'பினேன்ஸ் பார்க்' 'குரூஸ் பார்க்' ரத்தொளுகம, வெலிமட, கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது வாள்கள், கையடக்கத் தொலைபேசிகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் என்பவற்றுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் கெப்டன் ஜிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.

குரூஸ் பார்க்கில் கைது செய்யப்பட்ட நால்வருள் ஒருவர் பெண் என்றும் இவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் ஐ.எஸ் பற்றிய தகவல்களும் குண்டு வெடிப்புச் சம்பவம் பற்றிய வீடியோ கிளிப்களும் இருந்ததன் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விமானப்படை பேச்சாளர் கூறினார்.

அத்துடன் சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் விமான நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் மற்றும் பொதிகள் கடும் சோதனைகளுக்குப் பின்னரே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தின் கீழ் இராணுவத்தினரும் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் தேடுதல்கள் மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். சாய்ந்தமருதில் இராணுவத்தினர் முன்னெடுத்த தேடுதல் பெரும் வெற்றியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களை அநாவசியமாக அச்சப்பட வேண்டாமென்றும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அத்துடன் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் வழங்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை