தாக்குதலை தடுக்கத் தவறிய நிர்வாகிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை

உச்ச நீதிமன்றத்தில் மனு  

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) காலை கொழும்பிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்காமல் உதாசீனம் செய்த குற்றச்சாட்டுக்காக நாட்டின் உயர் நிருவாகிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபர் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று(29)அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.  

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு சட்டத்தரணியாக கடமை புரிய முடியாதென உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட பொது வழக்கு ஆர்வலரான நாகாநந்த கொடிதுவக்கு என்பவரே பத்து உயர் நிருவாகிகளுக்கு எதிராக நேற்று இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார். சிவிலியன்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்திய குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் பற்றி இந்தியாவின் 'ரோ' அமைப்பு உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவினர் முன்கூட்டியே அறிவித்தபோதும் உயர் நிருவாகிகளின் உதாசீனம் காரணமாகவே அனைத்து சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.  

அரசியலமைப்பின் 12வது சரத்தின் (1) ஆம் பிரிவு 'அனைத்து நபர்களும் சட்டத்துக்கு முன் சமன்,' என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குண்டு வெடிப்புத் தாக்குதலால் உயிரிழந்தவர்களது குடும்ப உறவுகளுக்கு நட்டஈடு வழங்குமாறும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

(லக்ஷ்மி பரசுராமன்)  

Tue, 04/30/2019 - 10:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை