ஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்; அடுத்த மாதம் அமுல்

ஒன்லைனில் பயணச்சீட்டுக்களைப் பெறும் புதிய நடைமுறையை ரயில்வே திணைக்களம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  

சுற்றுலாத்துறை சார் முகவர்களால் வெளிநாட்டவர்களுக்கு கூடிய விலையில் பயணச்சீட்டுக்கள் விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலேயே இந்நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுற்றுலா முகவர்கள் அதிக எண்ணிக்கையில் ரயில் பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்து, பின்னர் அவற்றை கூடிய விலையில் வெளிநாட்டவர்களுக்கு விற்பது தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே புதிய நடைமுறைக்கான உத்தரவைப் பிறப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.  

இருப்பினும், இப்புதிய நடைமுறை அமுல் செய்யப்பட்டதன் பின்னர், வெளிநாட்டவர்களும் , உள்நாட்டவர்களும் ரயில் பயணச்சீட்டுக்களை ஒன்லைன் மூலமே பெற்றுக் கொள்ளமுடியும். இது ரயில் பயணச்சீட்டு கொள்வனவில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்க பெரிதும் உதவும். அதேவேளை, ரயில் நிலைய பயணச் சீட்டு கரும பீடங்களில், தங்களது பயணச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்யும் இலங்கையர்களோ அல்லது வெளிநாட்டவர்களோ, தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி ஒரு பயணச்சீட்டை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்.  

ஆனாலும், ஓய்வூதியம் பெறுவோருக்கான ரயில்வே ஆணைச்சீட்டு (வோரண்ட்)  நடைமுறைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் தெரிவித்தார்.    

 

Thu, 04/18/2019 - 08:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை