நிலையான ஐக்கியம் தரட்டும் தமிழ்- சிங்களப் புத்தாண்டு

பெரியோர் ஆசி பெற்று புத்தாண்டை வரவேற்போம்!

மிழ் வருடங்கள் அறுபது உள்ளன .இந்த அறுபது வருடங்களில் இவ்வருடம் 33வது வருடத்தைக் குறிக்கின்றது.ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர் கொண்டு மழை,காற்று,பயிர்வளம் போன்ற இயற்கைக்கால பலாபலன்களை மாற்றி அமைப்பன.இவ்வருடத்தின் ஆரம்பம் பிரம்மா உலகப் படைப்பை ஆரம்பித்த நாள் என்பது புராண ஐதீகம்.இதையே புதுவருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றோம்.

இந்நாளில் பாவங்கள் தோஷங்கள் நீங்க வேண்டி ஆலயங்களில், அர்ச்சகர் இல்லங்களில் மருந்துவகை, பூவகை,வாசனைத் திரவியம் போன்றவை போட்டுக் காய்ச்சிய மருத்துநீரை தலையிலே தேய்த்து ஸ்நானம் செய்து உலகின் கண்கண்ட தெய்வமாய் மிளிரும் சூரியபகவானுக்கு வீடுகளில் பொங்கலிட்டு பூஜை செய்ய வேண்டும். அதன் பின்னர் புத்தாடை, ஆபரணங்கள் அணிந்து ஆலய வழிபாடு செய்ய வேண்டும். குரு பெரியார் ஆசிகள் பெற்று அறுசுவை உணவு உண்டு இரவில் மங்களகரமாய் நித்திரை செல்ல வேண்டும்.இது எம்மவரின் பாரம்பரிய மரபாகும்.

மங்களகரமான இந்நாட்களில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வதால் இந்த வருடம் முழுநாளும் மனங்கள் மகிழ்வு பெறும் என்பது எம்மவரின் ஐதீகமாகும்.

நமது முன்னோர் இரு கணிப்பு முறைகள் மூலம் வருடத்தை வகுத்தனர்.ஒன்று சௌரமானம்.சௌரம் என்றால் சூரியன்.சூரியன் மேட ராசியிலிருந்து மீனராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்கள் சௌர மாதங்கள் எனப்பட்டன.சூரியன் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை முதலாம் நாள் தமிழ் வருடப் பிறப்பன்று தொடங்கி மீண்டும் சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் காலம் முழுவதும் ஒரு சௌர வருடம் ஆகும்.இந்த வருடப் பிறப்பை இந்துக்களும் பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர்.

மற்றையது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும்.ஒரு பூர்வ பக்கப் பிரதமை முதல் அடுத்து வரும் அமாவாசை வரையுள்ள 30திதிகள் கொண்ட காலப் பகுதி சாந்திர மாதம் ஆகும்.இவ்வாறு ஒரு வருடத்தில் 13அமாவாசைகள் வருகின்றன. சூரியன் மேட ராசியில் சஞ்சரித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும்.இதை வசந்தகாலம் என அழைப்பர்.

இலங்கை வாழ் இந்து மக்களும் பௌத்த சிங்கள மக்களும் ஒருமித்துக் கொண்டாடும் தனிச்சிறப்புப் பெற்றது புதுவருடப் பிறப்பு.அதனால் இது ஒரு தேசிய தின விழாவாகும்.பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல், பெரியோரை வணங்கி ஆசி பெறுதல், பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.பௌத்த மக்களும் இந்துத் தெய்வ நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.

புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகள் சேர்ந்த மருத்துநீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.தாழம்பூ, தாமரைப்பூ,மாதுளம்பூ,துளசி,வில்வம்,வேம்பு,அறுகு, பால், கோரோசனை,கோசலம், கோமயம், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மஞ்சள், மிளகு, திற்பலி, சுக்கு, விஷ்ணு கிராந்தி, சீதேவியார் செங்கழுநீர் போன்ற மருத்துவக் குணம் கொண்டவற்றை சுத்த நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய கஷாயமே மருத்துநீர் எனப்படும்.

இந்த மருத்துநீரை மக்கள் முதல் நாளே தமது வீடுகளுக்கு எடுத்துச் சென்று விடுவார்கள்.புத்தாண்டு பல நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துநீர் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.கண்கண்ட தெய்வமாகவும் உலக இயக்க நாயகனாகவும் விளங்கும் சூரியனை அடுத்து வழிபடுதல் வேண்டும்.இல்லங்களில் சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கிப் படைத்து உண்பது வழக்கம்.சிங்கள மக்கள் 'கிரிபத்'என்று பாற் பொங்கல் பொங்குவார்கள்.புதுவருடம் பிறக்கின்ற நேரத்தில் கோயில்களில் சங்கிராந்தித் தீர்த்தம் இடம்பெறும்.

இதேநேரம் பாடசாலைகள், வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களிலும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுண்டு.வழிபாடுகள் முடிவடைந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று புதுவருட பலகாரங்கள் உண்டு மகிழ்வர்.புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பொழுது பழைய கடன்கள் ஏதும் இருந்தால் அவற்றைத் தீர்த்துக் கொள்வர்.நல்ல சுபவேளையில் கைராசியுள்ளவர்களிடம் ஏனையவர்கள் கைவிஷேடம் பெற்றுக் கொள்வது ஒரு நல்ல பண்பாகும்.மேலும் சுபவேளையில் வியாபார ஸ்தலங்களில் பிள்ளையார் சுழிபோட்டு புதுக்கணக்கைத் தொடங்குவார்கள்.இதேநேரம் வங்கிகளிலும் புதுக்கணக்கை ஆரம்பிக்கும் போது பரிசுகளையும் வழங்குவார்கள்.பிள்ளைகள் சுபவேளை பார்த்து பாடத்தைப் படிக்கத் தொடங்குவார்கள்.

மாதா, பிதா, குரு ஆகியவர்களை விழுந்து கும்பிட்டு ஆசிபெறுதல் மற்றொரு சிறந்த பண்பாகும்.சித்திரை மாதம் சிறுமாரி என மழை பெய்யத் தொடங்கும்.மலர்கள் பூத்துச் சொரியும்.பயிர்கள் செழிக்கும்.வசந்த ருதுவென சோழகக் காற்று வீசத் தொடங்கும்.வேப்பம்பூ சொரியும்.தேசிய விளையாட்டுகளில் போர்த் தேங்காய் அடித்தல் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு விளையாட்டாகும்.இன்றைய காலகட்டத்தில் இவ்விளையாட்டு அருகி விட்டது.தற்போது வழுக்குமரம் ஏறுதல், கிளித்தட்டு, தயிர்முட்டி அடித்தல், மாட்டுவண்டிச் சவாரி,மஞ்சுவிரட்டுதல்,தலையனை அடித்தல, கயிறு இழுத்தல் போன்றவை தேசிய விளையாட்டுக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

 

சாமஸ்ரீ- க.மகாதேவன் ..
உடப்பூர்

Sat, 04/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக