குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி

இன்னுமொருவர் காயம்

குமண தேசிய பூங்காவில் வைத்து சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (18) மாலை 2.00மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செல்வதுரை ரவிச்சந்திரன் எனும் குமண தேசிய வனத்தில் தொழிலாளராக பணிபுரியும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது;

குமண தேசிய பூங்காவில் உள்வீதி புணரமைப்புப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென வந்த சிறுத்தையொன்று ஒருவரை தாக்கி காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள் வன பரிபாலன திணைக்களத்துக்கு அறிவித்து வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியுடன் காட்டுக்குள் சென்றபோது அவர் ஸ்த்தலத்திலே இறந்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவத்தை வணப்பரிபாலன வாகன சாரதி ஒருவர் படமெடுத்துக் கொண்டிருந்த போது அவர் மீது திடீரென பாய்ந்த சிறுத்தை அவரை காயப்படுத்தியுள்ளது.

சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர் பொத்துவில், கோமாரி, சங்கமன்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த செல்வதுரை ரவிச்சந்திரன் (48) என்வராவர். இவருடைய சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாணம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Fri, 04/19/2019 - 11:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை