நுரையீரல் குருதிக்குழாய் அடைப்பு

மரபணு மாத்திரம் காரணம் அல்ல!

மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்பட்டுவரும் அபரிமித வளர்ச்சியின் அடிப்படையில் மனிதனுக்கு உடல் உள ரீதியாக ஏற்படும் பாதிப்புக்களும் அவற்றுக்கான சிகிச்சைகளும், அப்பாதிப்புக்களை தவிர்ந்து கொள்ளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தவண்ணமுள்ளன.  

அந்த வகையில் நுரையீரலுக்கு குருதியைக் கொண்டு செல்லும் குருதிக் குழாயில் அடைப்பு ஏற்படுவது தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே நுரையீரல் குருதிக்குழாய் அடைப்பு (pulmonary embolism) எனப்படுகின்றது.  

ஐக்கிய அமெரிக்கர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் நோயாக நுரையீரல் குருதிக்குழாய் அடைப்பு காணப்பட்டாலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இந்நோய்க்கு உள்ளாவோர் பதிவாகவே செய்கின்றனர். அதனால் இந்நுரையீரல் குருதிக்குழாய் அடைப்பு குறித்து அறிந்து அதற்கு ஏற்ப செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கு உகந்தது.  

மனிதனின் தற்போதைய வாழ்வொழுங்கானது, உடலியக்கத்துக்கு எதிரான வாழ்க்கை முறையாகவே விளங்குகின்றது. இதுவே எல்லா இடங்களில் இருந்தும் கிடைக்கும் செய்தியாக உள்ளன. அதாவது தொலைக்காட்சி, கணினி விளையாட்டுக்கள் என்றபடி ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியான பொழுதுபோக்கு என்று நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. அதனால் எதற்கும் நகர வேண்டிய அவசியமில்லை.  

ஆனால் இவை உடலின் இயல்பான இயக்கங்களை முடக்குபவை.  

இன்றைய sedentary life style என்ற சொகுசு வாழ்க்கையின் படி எதற்கும் எங்கும் நகரத் தேவையில்லை. அனைத்தையும் இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. ஆனால் இந்த புதிய வாழ்க்கை முறைக்கு உடலுறுப்புகள் இலகுவில் பழக்கப்படாது. இதன் விளைவாகவே புதிய வாழ்க்கை முறையின் ஊடாகப் புதிய புதிய உடல, உள ஆரோக்கிய பாதிப்புக்கள் தோற்றம் பெற்று வருகின்றன. அவற்றில் இந்த நுரையீரல் குருதிக் குழாய் அடைப்பும் ஒன்றாக விளங்குகின்றது.  

இந்த குருதிக்குழாய் அடைப்பு நிலை தோன்றுவதற்கு மரபணு காரணங்கள் மாத்திரமல்லாமல் சுற்றுச்சூழல் காரணங்களும் துணைபுரிகின்றன. இதற்கு முற்றிலும் மரபணு மாத்திரம் தான் காரணம் என்றோ , முற்றிலும் சுற்றுச்சூழல் காரணிகள் தான் காரணம் என்றோ கூறி விட முடியாது. மரபணு பதிவு (genetic imprint) சூழலிலும் சூழலை மரபணு உரு-இயல் மாற்றங்களும் (genetic mutation) தீர்மானிக்கின்றன. அதாவது மரபணு, சூழலியல் காரணிகள் ஒன்றில் ஒன்று ஊடுருவி நிற்றல்தான் பல நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன.  

ஆனாலும் மருத்துவ உலகம் மரபணு காரணிகளைத் தான் முன்னிலைப் படுத்துகின்றன. ஏனெனில் அதுவே அதிக இலாபம் தரக்கூடியதாகும். சுற்றுச்சூழல் காரணிகளை முன்னிலைப் படுத்துவதன் மூலம் அவ்வாறான இலாபத்தைப் பெற முடியாது என்பதே அதற்கான காரணமாகும்.  

ஆனால் பெருகி வரும் தூசுமண்டலம், உற்பத்தி என்ற பெயரிலும் வேலை வாய்ப்பு என்ற பெயரிலும் வளர்ச்சி என்ற பெயரிலும் சுற்றுச்சூழல் நாச காரணிகளை மனிதன் உற்பத்தி செய்து கொண்டிருப்பதால் பலவித நோய்கள் தோற்றம் பெறுவதை மறுக்க முடியாது. அதன் ஊடாக மனிதன் தான் வாழும் சூழலையும், உயிரினங்கள் உள்ளிட்டவை வாழும் சூழலையும் அழிக்கிறான். இதனால் மனிதத் தேவைகள் அதிகரித்து செல்கின்றன. கட்டுப்பாடற்ற உற்பத்தி மற்றும் நுகர்வினால் ஏற்படும் சூழலியல், உடலியல், உயிரியல் பாதிப்புக்கள் குறித்து மனிதன் யோசிப்பதில்லை. இதன் விளைவாக உணவுச்சங்கிலி மாத்திரமல்லாமல் உயிர்ப்பல்வகைமை கூட அழிவடைகின்றன. இதன் பிரதிபலனாக புதிய நோய்கள், மர்ம நோய்கள் தோற்றம் பெறுகின்றன. அந்த வகையில் இந்த நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு அதிகரிக்க நகரங்களின் அசுத்தமடைந்திருக்கும் சூழலியல் காரணிகளே முக்கிய காரணமாக விளங்குகின்றன.  

இந்த அடைப்பு பெரும்பாலும் இரத்தக்கட்டியின் மூலம் தான் ஏற்படுகின்றது, இரத்தக்கட்டியானது, நுரையீரலின் திசுக்களுக்கு குருதி செல்வதை தடுத்து விடும். அதனால் இது உயிர்க்கொல்லி நோயாகக் கூட அமைந்துவிடலாம். இரத்தக்கட்டி உடலின் ஒரு பகுதியில் உருவாகி இரத்தச் சுழற்சியுடன் சேர்ந்து அதுவும் சுழலும். இச்சமயம் உடலின் மற்றுறொரு பகுதிக்குச் செல்லும் இரத்தக்குழாயை இது திடீரென அடைக்கும். இதற்கு நுரையீரல் நல்ல உதாரணமாகும். குறிப்பாக நுரையீரல் குருதிக்குழாய் அடைப்பானது வயது அதிகரித்து செல்லும் போது அதன் அச்சுறுத்தலும் அதிகரித்து செல்லும்.  

இதன் விளைவாக மார்பில் வலி, வேகமாக மூச்சு விடுதல், சுல் என்ற ஒரு வகை நெஞ்சு வலி, தலைசுற்றல், மயக்க உணர்வு,இதயத்துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இருமல்- -( சிலவேளைகளில் வறட்டு இருமலாகவும் சில வேளைகளில் சளி, இரத்தத்துடன் கூடிய இருமல் இருக்கலாம்) போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். சில சமயம் மாரடைப்பு கூட ஏற்படலாம். அத்தோடு கை அல்லது காலில் இரத்தக்கட்டிகள் இருப்பவர்களுக்கும் நுரையீரல் அடைப்பு அச்சுறுத்தல் அதிகமாகும்.  

அதன் காரணத்தினால் நீண்ட நேரம் எந்தவித செயல்பாடுமின்றி படுத்துக் கொண்டிருத்தல், நீண்ட நேரம் வாகனம் செலுத்துதல், நீண்ட நேரம் விமானத்தில் பயணம் செய்தல், மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்பாக ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கிரிக்கெட், உதைப்பந்தாட்டப் போட்டிகளை பார்த்து கொண்டிருத்தல், தொடர் நாடகங்கள் பார்த்தல் என்பவற்றைத் தவிர்த்தல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக அமையும்.  

ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில், நாளொன்றுக்கு தொடராக இரண்டு மூன்று மணித்தியாலயங்களுக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி, கணினி பார்த்துக் கொண்டிருப்பதால் நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும் அச்சுறுத்தல் அதிகம் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு சிறுவர்கள் உடல் இயக்க விளையாட்டுகளை விடுத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் கணினியிலும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதும் இப்பாதிப்பு ஏற்படத் துணைபுரிவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  

அதனால் நீண்ட நேரம் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருத்தல், இயக்கமின்றி இருத்தல் போன்றவாறான காரணங்களினால் உடலின் கீழ் உறுப்புகளில் இரத்தம் தேங்கும். அத்தோடு இயல்பற்ற இரத்த ஓட்டத்தினால் இரத்தக்கட்டிகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.  

அதேநேரம் இந்த இரத்தக்குழாய் அடைப்புக்கும், மாரடைப்புக்கும் வெளிப்படக்கூடிய அறிகுறிகள் பெரும்பாலும் ஒரே விதமாகவே காணப்படும். அதனால் நோய் அறிகுறிகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் கவனம் செலுத்தி உரிய மருத்துவ ஆலோசனைகளுடன் செயற்பட்டால் நுரையீரல் குருதிக்குழாய் அடைப்பினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.  

(முஹம்மத் மர்லின்)

Sat, 04/06/2019 - 09:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை