தோற்கடிக்கப்பட்ட நிதியொதுக்கீடுகள் நாளை சபையில்

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவகாரத்தில் தோற்கடிக்கப்பட்ட மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்துறை, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபை அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீடுகளை நாளை (5) நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்புக்குப் பின்னர் இதை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேற்படி இரண்டு அமைச்சுக்களுக்குமான நிதியொதுக்கீடுகளும் கடந்த மார்ச் 28ம் திகதி எதிர்க்கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டிருந்தன.

இதற்கிணங்க கட்சித்தலைவர்கள் மற்றும் அமைச்சரவை தனித்தனியே கூடி மேற்கொண்ட தீர்மானத்துக்கமைய மேற்படி இரண்டு அமைச்சுக்களுக்குமான நிதியொதுக்கீட்டுப் பிரேரணையை சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று குறைநிரப்புப் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்.

அதற்கிணங்க அப்பிரேரணை கணக்காய்வுக் குழுவுக்கு நேற்றைய தினமே சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதன் அறிக்கை இன்று 4ம் திகதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இதையடுத்து நாளை (5ம் திகதி) மேற்படி இரு அமைச்சுக்களுக்குமான நிதியொதுக்கீடுகள் நிறைவேற்றப்படவுள்ளன.

2019ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளும், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஐந்து தலைப்புக்கள் தவிர்ந்த ஏனையவற்றுக்கான ஒதுக்கீடுகளும் எதிர்க்கட்சியால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டு அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்களுக்கும் வெவ்வேறாக மூன்று வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன. ஒதுக்கீடுகளுக்கு எதிராக மேலதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டன. வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த 38 உறுப்பினர்கள் சபையில் சமூகமளித்திருந்தனர். ஆளும் தரப்பில் மிகவும் குறைந்தளவான உறுப்பினர்களே பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிலையில் ஆளும் தரப்புடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் மாத்திரம் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்தரப்பில் ஜனாதிபதிக்கு ஆதரவான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பின்போது சபையில் சமுகமளித்திருக்கவில்லை.

வரவுசெலவுத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாவது நாள் விவாதமான கடந்த 28 ஆம் திகதி உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகரம், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான குழுநிலை விவாதம் நடைபெற்றது.

முதலில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து அதே அமைச்சின் 261 முதல் 279, 312 முதல் 319 மற்றும் 321 வரையான செலவுத் தலைப்புக்களுக்கும் வாக்கெடுப்பு நடத்துமாறு

எதிரணியினர் கோரினர். இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 15 மேலதிக வாக்குகளால் அந்த ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டதாக சாபாநாயகர் அறிவித்தார்.

இதன் பின்னர் மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான 162 மற்றும் 311 செலவுத் தலைப்புக்களை நிறைவேற்ற முற்பட்டபோது அதற்கும்வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக 24வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 14 மேலதிக வாக்குகளால் இந்த ஒதுக்கீடுகளும் தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை