கிழக்கு கரையில் சூறாவளிக்கான சாத்தியம்

கிழக்கு கரையில் சூறாவளிக்கான சாத்தியம்-cyclonic storm east coast

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பிற்பகலில் மழை

பொத்துவிலுக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 1050 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம், இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரும்போது, சூறாவளியாய மாறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்  தாழமுக்கமாக விருத்தியடைந்து நேற்று (25)  பிற்பகல் 08.30மணிக்கு வட அகலாங்கு 01.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 90.1E இற்கும் இடையில் பொத்துவிலுக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 1050 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில்  ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடிய  சாத்தியம் காணப்படுவதோடு, வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது. 

அதேவேளை இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரும்போது  சூறாவளி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று  வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை, பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொள்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

Fri, 04/26/2019 - 12:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை