தலிபான்களை விட ஆப்கான் படைகளால் அதிக மக்கள் பலி

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் முதல் முறையாக கிளர்ச்சிக் குழுக்களை விடவும் இராணுவத்தால் அதிகம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இடம்பெற்ற பொதுமக்கள் உயிரிழப்பில் 54 வீதமானதற்கு அரச ஆதரவுப் படை பொறுப்பாக இருப்பதாக அதன் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா பிரதிநிதி டடமிச்சி யமமோட்டோ குறிப்பிட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்குப் பின் பொதுமக்கள் உயிரிழப்பு குறைந்த நிலையை எட்டியிருக்கும் சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஆப்கானிஸ்தான் யுத்தத்தை கண்காணித்து வரும் ஐ.நாவின் அறிக்கையின்படி, கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரை ஆயுதக் குழுக்கள் 227 பொதுமக்களை கொன்றிருப்பதோடு 736 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் காலத்தில் 305 பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் 303 பேர் காயமடைந்ததற்கு ஆப்கான் மற்றும் சர்வதேச படைகள் காரணமாக இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

தரைவழி மோதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருட்களே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணியாக இருப்பதாக ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பிரிவில் வான் தாக்குதல்களால் 145 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் பாதி அளவினர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

Fri, 04/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை