உறுதியான பொருளாதாரக் கொள்கையால் ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளது

உறுதியான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் நாணயப் பெறுமதி வலுவடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்தார். 

நிதி அமைச்சுத் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வருமானத்தைவிட அதிக செலவீனங்களை மேற்கொள்வது நாட்டைப் பாதிப்புக்கு இட்டுச்செல்லும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கே கடன்களைப் பெறவேண்டியுள்ளது. 2018ஆம் ஆண்டு இறுதியில் 24இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஏற்றுமதி வீழ்ச்சியுறுவது வழமையாக இருக்கிறது. எனினும், இந்த நிலைமையை நாம் மாற்றியமைத்துள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் படிப்படியாக நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட அரசியல் சதியினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியுறத் தொடங்கியது. எனினும் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுவாக உள்ளது. கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. பொருளாதார கொள்கை சரியாக இருக்கும்போது நாட்டின் நாணயப் பெறுமதியும் உறுதியாக இருக்கும். ரூபாவின் பெறுமதி சந்தையினால் தீர்மானிக்கப்படும்போது ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. 

நாம் எதையாவது செய்ய முற்படும்போது நாட்டை விற்கின்றோம், வளங்களை விற்கின்றோம் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். காணிகள் தொடர்பில் புதிய கொள்கையொன்றை தயாரித்துள்ளோம்.  

மக்களின் சுகாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனைகளை வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கியுள்ளோம். பஸ் மற்றும் ரயில்களில் நீண்டகாலம் பயணிக்கும் பயணிகளுக்குத் தேவையான மலசலகூட வசதிகள் இல்லை. சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அவர்களுக்கு கடன்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இல்லாதவர்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.  

அரசாங்கத்தைப் பொறுப்பேற்றபோது இருந்த நிலைமை விரைவில் மறந்துபோகிறது. சில மணித்தியாலங்களில் வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிவிடலாம். எனினும், அத்திவரமிட்டு வீடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நீண்டநாட்கள் எடுக்கும். நாட்டைப் பெறுப்பேற்றபோது ஊடக சுதந்திரத்தில் இலங்கை பின்தங்கிய நிலையில் இருந்தது. ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யும் நிலைமையில் இருந்தோம். ஆகக்குறைந்தது 15 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.  

Mon, 04/08/2019 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை