சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ், ரயில் சேவைகள்

மேலதிகமாக 65 ரயில் சேவை

1,500 இ.போ.ச பஸ்கள்  

600 தனியார் பஸ்கள்  

தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுவதும் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை செய்துள்ளதாக அறிவித்துள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இன்று புதன்கிழமை முதல் மேலதிகமாக 65 புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இ.போ.சவுக்குச் சொந்தமான 1,500 பஸ்களும், 600 தனியார் பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.  

இந்த மேலதிக புகையிரத மற்றும் பஸ் சேவைகள் எதிர்வரும் 22ஆம் திகதிவரை தொடரும் என்றும் அதிகமான பஸ் கட்டணங்கள் அறவிடப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.  

பத்தரமுல்லையில் அமைந்துள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே துறைசார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் இங்கு மேலும் கூறியதாவது,  

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நாடுபூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்சேவைகள் 22ஆம் திகதிவரை தொடரும். இந்த விசேட புகையிரதச் சேவைகள் கோட்டை – பதுளை, கோட்டை – களுத்துறை, கோட்டை – காலி, கோட்டை – மாத்தறை, கோட்டை – யாழ்ப்பாணம், கோட்டை – குருணாகலை வரை முன்னெடுக்கப்படும்.  கோட்டை – வவுனியா வரை தற்போது முன்னெடுக்கப்படும் புகையிரதச் சேவை யாழ்ப்பாணம் வரை நீடிக்கப்படும். மேலும் சில புகையிரதச் சேவைகளும் இவ்வாறு நீடிக்கப்படவுள்ளன. அதேபோன்று இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 1,500 பஸ்கள் நாடுமுழுவதும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன. கால சூழ்நிலைக்கு ஏற்பட மேலதிகமாக 1,350 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சாதாரணமாக 6,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால், சில காரணங்களின் அடிப்படையில் 5,400 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றன. இதன் அடிப்படையிலேயே முடிந்தளவு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம்.  

கடந்த காலங்களில் பிரதானமாக கொழும்பிலிருந்து மாத்திரமே மேலதிக பஸ் சேவைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இம்முறை மாரகம, மாகும்பர பஸ் நிலையங்களிலிருந்து தூரப் பிரதேசங்களுக்கான பஸ் சேவைகளை ஒழுங்குச் செய்துள்ளோம். அதனால் கட்டாயம் கொழும்புக்கு வந்துதான் போகவேண்டுமென்ற நிலைமை இல்லை. இதேவேளை, தனியார் பஸ் சேவையை எடுத்துக்கொண்டால் தேசியப் போக்குவரத்து சபை 2,200 பஸ்களை தினமும் சேவையில் ஈடுபடுத்துகிறது. அதனை 2,800 ஆக அதிகரித்துள்ளது. 600 பஸ்கள் வரை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலதிக தேவை ஏற்படும் பட்சத்தில் இன்னும் பஸ்கள் தயாராக உள்ளன.  

மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில் திரும்பி வருவதற்கான சந்தர்ப்பம் இல்லை. அதனால் மேலதிகமாக ஈடுபடுத்தப்படும் பஸ்களில் அரை சொகுசு கட்டணங்கள் அறவிடப்படும். புத்தாண்டு பஸ் சேவையின் போது அதிக கட்டணம் அறவிடப்படுவதாக எமக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அதிக கட்டணம் அறவிடப்படுவதை தடுப்பதற்காக நாங்கள் விசேட வேலைத்திட்டங்களை ஒழுங்குச் செய்துள்ளோம். பஸ் புறப்படுவதற்கு முன்னர் அனைவருக்கும் டிக்கட்டுகள் வழங்கப்பட வேண்டும். பஸ் கட்டணங்களை பரசீலிப்பதற்கு விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சேவையில் ஈடுபடுத்தப்படும். முறைப்பாடுகளை அளிக்க 1955 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் அவர் கூறினார்.  

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)    

Wed, 04/10/2019 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை