குண்டு வெடிப்புகள் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்

கர்தினால் மெல்கம் ரஞ்சித் கடும் கண்டனம்

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் உட்பட நாட்டின் 8 இடங்களை இலக்குவைத்து இடம்பெற்ற குண்டுவெப்புகள் திட்டமிடப்பட்ட தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று தெரிவித்தார்.

இந்த சோகமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இது மனிதகுலம் ஏற்றுக்கொள்ள முடியாத கீழ்த்தரமான செயற்பாடென்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 8 இடங்களில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு புஞ்சி பொரள்ளையில் அமைந்துள்ள உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் வைத்து ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் இங்கு தெரிவித்ததாவது,

குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்துள்ள மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் எனது கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தச் சோகமான தருணத்தில் பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்காது நாட்டின் சட்டம்,ஒழுங்கை பாதுகாக்கச் செயற்பட பாதுகாப்புத்துறைக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க்கொழும்பு புனித செபஸ்டியன் தேவாலயத்தில் உட்பட பல இடங்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஈஸ்டர் ஆராதனையில் கலந்துகொள்ள வந்த அப்பாவி பொது மக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.சிறுவர்கள், பெண்கள் உட்பட இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.இந்தக் கீழ்த்தரமான சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த சோகத்தையும், கவலையையும் தெரிவித்துக்கொள்வதுடன். குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறான நாகரிகமற்ற கீழ்த்தரமான செயற்பாடுகள் மூலம் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது 10 வருடத்திற்கு முன்னர் இலங்கையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவே எண்ணியிருந்தோம். ஆனால், மீண்டும் இதனை ஆரம்பமானதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இதன் பின்புலத்தில் யார் உள்ளனர் எனத் தெரியவில்லை. இது இலங்கையில் உள்ள குழுக்களா? அல்லது சர்வதேச குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலா? எனக் கூற முடியாதுள்ளது. பல இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இது திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம். இலங்கையர்கள் இந்தச் சோகமான தருணத்தில் குழப்பமடையாமல் இருக்க வேண்டும். சட்டத்தை எவரும் கையில் எடுக்கக் கூடாது. சம்பவத்திற்கான காரணத்தை கண்டிறிந்து அவர்களை தண்டிப்பதற்காக பாதுகாப்புத் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை