ஜனாதிபதி இன்று மட்டு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை 12ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" செயற்திட்ட மீளாய்வு நிகழ்வு மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி முதல் இன்று 12ஆம் திகதி வரை 14 பிரதேச செயலக மட்டத்திலும்,மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இறுதி நிகழ்வான இன்று காலை 9.30 மணியளவில் ஸ்மாட் ஸ்ரீலங்கா எனும் தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். அதன்பின்னர் காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பிரதான நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,200பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. இதேசமயம் சத்துருக்கொண்டான் கிராமத்தை சேர்ந்த 53 பயனாளிகளுக்கு வீடுகள் அமைப்பதற்கும்,அக்கிராமத்தை சேர்ந்த 72 பயனாளிகளுக்கு மலசலகூடம் நிர்மாணிப்பதற்கும் முதற்கட்ட காசோலைகள் வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று வாழ்வாதார உதவிகள்,விவசாய கடன்கள், பாடசாலைக்கான உபகரணத்தொகுதிகள்,நெசவுத்தொழில் உபகரணங்கள்,சிறுகைத்தொழில் உபகரணங்கள் மற்றும் பல்வேறு அபிவிருத்திகளுக்கான ஊக்குவிப்புத் தொகையும்,5,000 பேருக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வைத்து தென்னை மற்றும் மரமுந்திரிகை கன்றுகளும் வழங்கிவைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அம்பியூலன்ஸ் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதுடன் மாவட்டத்தில் உள்ள நான்கு வணக்கஸ்தலங்களுக்கு புனரமைப்பு செய்வதற்கான காசோலைகளும் வழங்கப்படவுள்ளதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

வெல்லாவெளி, ஆரையம்பதி, நாவற்குடா தினகரன் நிருபர்கள்

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை