ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேவைக்கேற்ப காய் நகர்த்தப்படும்

காலத்தின் தேவையறிந்து இன மத பேதமின்றி பிரதேசங்களின் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார். 

அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பல கிராமங்களின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அசறிக்கம ஜும்ஆப் பள்ளிவாசலில் நிகழந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சமூகத்தின் விடிவுக்காக சகல துறைகளிலும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளேன். அநுராதபுர மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் கிராமங்களிலும் வீதி மற்றும் குடி நீர்ப் பிரச்சினைகள் உள்ளன. மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இங்குள்ள மக்களின் வாக்குகளை பெற்றார்களே தவிர இம்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எவற்றையும் தீர்த்து வைக்கவில்லை.இங்குள்ள ஒரு சிலரை  கைப் பொம்மைகளாக வைத்துக்கொண்டுள்ள ஒரு சில அரசியல்வாதிகள் அவர்களைத் திருப்திப்படுத்த  எதையாவது செய்கின்றனரே தவிர,மக்களின் தேவைகளில் அக்கறை காட்டப்படவில்லை.

சமூகம் என்ற அடிப்படையில் பொதுவாகவே நான் செயற்பட்டு வருகின்றேன். இந்நிலையில் எனது  அபிவிருத்திப் பணிகளுக்கு பிறரின் பெயர்களைச் சூட்டும் வங்குரோத்து அரசியலும் தற்போது அரங்கேற்றப்படுகிறது.

பாடசாலைகளுக்கு சென்றால் மைதானமில்லை, வகுப்பறை கட்டிடமில்லை, பாதுகாப்பு சுற்றுவேலி இல்லை, கழிவறைகள் இல்லை என அதிபர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.இவைகள் அனைத்தையும் தனிமனிதனாக நின்று என்னால் ஒரே தடவையில் நிறைவு செய்ய முடியாது.

காலம் காலமாக நிலவி வந்த குறைபாடுகளை சிறிது சிறிதாகவே நிறைவேற்ற வேண்டியுள்ளது. 

இந்த மாவட்டத்தில் 117க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களுக்கும் சிங்கள மற்றும் தமிழ் சகோதரர் களின் கிராமங்களுக்கும் தனியாக நின்றே சேவைகள் செய்கிறேன்.

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் சிறந்த ஒருவர் களமிறக்கப்படுவார்.

அவரின் வெற்றிக்கு நாம் உழைக்க வேண்டும்.காலத்தின் தேவையறிந்து காய் நகர்த்தல்களை மேற்கொள்வோம் . சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும். எங்கு சென்றாலும் அச்சமின்றி சுதந்திரமாக சென்று வரக்கூடிய சூழலை உருவாக்கும் தலைவரையே நாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்றும்    அவர் கூறினார்.

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்) 

Wed, 04/17/2019 - 11:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை