சம்பந்தன் - பாதுகாப்பு செயலர் யாழ். நகரில் சந்திக்க ஏற்பாடு

வடக்கில் படைத்தரப்புக்காக பொது மக்களது காணிகள் சுவீகரிப்பது தொடர்பாகவும் ஏற்கனவே படைத்தரப்பால் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையே முக்கிய கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்டத்துக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி செல்லவுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சந்தித்து இக் காணி சுவீகரிப்பு தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் படைத்தரப்பு ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண நி​ைலமைகளினால் பொது மக்களுக்கு சொந்தமான பெருமளவான காணிகள் படைத்தரப்பால் சுவீகரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களில் படைத் தரப்புக்காக மேலும் பொது மக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. குறிப்பாக அண்மையில் காங்கேசன்துறையில் கடற்படையினருக்கு பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலையீடு செய்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தது.

இதேபோன்று நேற்றைய தினமும் மண்டைதீவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் காணியை, காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரிநிதிகள் இந் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே இக் காணி சுவீகரிப்புக்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் நேரடியாக தொடர்புகொண்டு இச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கையானது தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந் நிலையில் இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வினவிய போது இவ் விடயத்தை உறுதி செய்த அவர் இது தொடர்பாக தினகரனுக்கு தெரிவிக்கையில்,

காணி சுவீகரிப்பு தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் சம்மந்தனுடன் பேசியுள்ளார். இதன்போது, உடனடியாக இதனை நிறுத்துமாறு ஜனாதிபதி செயலனிக்கு கூறியிருந்ததாகவும் எனவே அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கூறினார். இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளருடைய உத்தரவுக்கமைவாக அனைத்து காணி சுவீகரிப்பு தொடர்பான அளவீடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு செயலாளர் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன் அங்கு ஒரு கூட்டத்தை நடத்தி அதற்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதை தீர்மானிப்பார்கள் என்றார்.

தேவராசா விரூஷன்

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை