உலகக் கிண்ண பாகிஸ்தான் அணி அறிவிப்பு; வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் நீக்கம்

இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் நீக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக சோபிக்கத் தவறி வரும் 27 வயதுடைய அமீர் கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார்.

உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் அதாவது மே மாதம் 23 ஆம் திகதி வரை அணிகளுக்கு மாற்றங்களைச் செய்ய முடியும் என்ற நிலையில் மீண்டும் அணிக்குத் திரும்ப அமீருக்கு சிறு வாய்ப்பு ஒன்று உள்ளது.

கடந்த 2010 இல் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு காரணமாக ஐந்து ஆண்டுகள் தடைக்கு உள்ளானதால் அவருக்கு 2011 மற்றும் 2015 உலகக் கிண்ண போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

அமீரின் ஆட்டத் திறன் பற்றி அவதானம் செலுத்தப்படுவதாக பாகிஸ்தான் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் குறிப்பிட்டார்.

“எதிர்பார்த்த வகையில் அமீர் திறமையை வெளிப்படுத்த தவறிவிட்டார்” என்று 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்த இன்ஸமாம் உல் ஹக் குறிப்பிட்டார்.

எனினும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் மொஹமட் அமீர் சேர்க்கப்பட்டுள்ளார். அதில் அவர் சோபிக்கும் பட்சத்தில் உலகக் கிண்ண அணியில் இணைய வாய்ப்பு உள்ளது.

சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் உடல் தகுதியை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் விரலில் காயத்திற்கு உள்ளான ஹபீஸ் முழுமையாக உடல் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் எதிர்பாராத அழைப்பாக 19 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஹஸ்னைன் இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அவர் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசியமை குறிப்பிடத்தக்கது.

“ஹஸ்னைன் நம்பிக்கை தருபவராக உள்ளார் உலகக் கிண்ணத்தில் அவர் அதிர்ச்சி அளிப்பவராக இருப்பார்” என்று இன்ஸமாம் குறிப்பிட்டார். கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் குழாத்திற்கு சப்ராஸ் அஹமட் தலைமை வகிக்கவுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கன்னி ஒருநாள் போட்டியில் சதம் பெற்ற 31 வயதுடைய ஆபித் அலி உலகக் கிண்ண அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதிகம் இளம் வீரர்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியில் குறிப்பிடத்தக்க அனுபவ வீரர்களும் உள்ளனர். சப்ராஸ் மற்றும் ஹரிஸ் சொஹைல் 2015 உலகக் கிண்ணத்தில் விளையாடியிருப்பதோடு 2007 உலகக் கிண்ணத்தில் விளையாடிய சொஹைப் மலிக் மற்றும் 2007 மற்றும் 2011 உலகக் கிண்ணத்தில் இடம்பெற்ற மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி நொட்டிங்ஹமில் நடைபெறும் தனது முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியையும் எதிர்கொள்ளவிருப்பதோடு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

பாகிஸ்தான் அணி

சப்ராஸ் அஹமட் (தலைவர்), பகார் சமான், இமாமுல் ஹக், அபித் அலி, பாபர் அஸாம், ஹரிஸ் சொஹைல், சொஹைப் மலிக், மொஹமட் ஹபீஸ் (உடல் தகுதியை பொருத்து), இமாத் வசீம், ஷடாப் கான், ஹஸன் அலி, பாஹிம் அஷ்ரப், ஜுனைத் கான், ஷஹீன் கான் அப்ரிடி, மொஹமட் ஹஸ்னைன்.

Sat, 04/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை