மக்களை பணயக் கைதிகளாக்கிய விசாரணையில் த.தே.கூட்டமைப்பும் பதில் சொல்ல வேண்டி ஏற்படும்

வீர வசனங்கள் பேசி தமிழர்களை இனியும் ஏமாற்ற முடியாது

மட்டக்களப்பில் சு.க.செயலாளர் தயாசிறி ஜெயசேகர

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் பொது மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பதில் சொல்ல வேண்டிவருமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பிருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான காரியாலயத்தை நேற்று முன்தினம் (01) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர், கடைசி யுத்தத்தில் தோல்வியின் நிலைக்குச் சென்ற விடுதலைப் புலிகள் பொது மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். மூன்று இலட்சம் தமிழர்களை புலிகள் பணயக்கைதிகளாக்கிய, விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் பதில் சொல்ல வேண்டி வரும்

கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழும் பிரதேசமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர். முஸ்லிம்களும் இங்கு வாழ்கின்றனர். சகலரும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பது பற்றியே நாம் சிந்தித்து வருகிறோம்.

தமிழ்,முஸ்லிம் தலைவர்களையும் சேர்த்து ஆட்சியமைப்பதே எமது கட்சியின் எதிர்கால இலக்கு.கிழக்கு மாகாணத்திலுள்ள சிறந்த தலைவர்களை பாராளுமன்றம் அழைத்துச் செல்லும் திட்டங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகுத்து வருகிறது. மற்றவர்களின் விளக்கில்

வெளிச்சத்தைப் பார்க்க வேண்டிய தேவை எமக்கில்லை.தமிழ்த் தலைவர்கள் மட்டக்களப்பு மக்களுக்கு சேவை செய்யாமல், தங்களது உறவினர், குடும்பங்களையே கவனித்துள்ளனர்.

கிழக்கு மாகாண மக்களின் கண்ணீர், வேதனைகளை அரசியல் மூலதனமாக்கி பாராளுமன்றத்துக்கு வந்த தமிழ் தலைவர்கள் மக்களின் துயரங்களைக் கண்டுகொள்ளவில்லை. வீர வசனங்களைப் பேசி அப்பாவித்தமிழர்களை ஏமாற்றும் அரசியலையே இவர்கள் செய்துள்ளனர்.

எனவே ஜாதி,மத,பேதமில்லாத எமது கட்சியில் சகலரும் இணைய வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் ஜனாதிபதியாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். எங்களுடன் இணைந்து வேலை செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் முன்வர வேண்டும்.

இந்த நிகழ்வுகளுக்கு மின்சாரம் இல்லாமல் நாம் அனுபவித்த கஷ்டங்களைப் பார்க்கின்ற போது, சாதாரண மக்கள் எவ்வளவு இன்னல்களை அனுபவிப்பர் என்பதை எண்ணிப்பார்க்க முடிகின்றது. இந்த அரசாங்கத்தால் கடந்த நான்கரை வருடங்களில் மின்உற்பத்தி நிலையத்தைக் கூட அமைக்க முடியாமல் போயுள்ளது.

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு மின்சாரத்துண்டிப்பை அமுல்படுத்தப் போவதில்லையென அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் புத்தாண்டுக்கு பிற்பாடு நாடு பூராகவும் 12 மணித்தியாலங்கள் மின்சாரத் துண்டிப்பு அமுல் படுத்தப்படவுள்ளது.

எனவே மக்களை ஏமாற்றாத, மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்காத அரசாங்கம் ஒன்றை அமைக்க சகலரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அணிதிரள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை