துயரத்தில் மூழ்கிய பரிசுத்த நன்னாள்!

கொழும்பு, மட்டக்களப்பு, தெஹிவனை, கடுவாப்பிட்டிய உட்பட பல்வெறு இடங்களிலும் நேற்றுக்காலை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி உலகிலுள்ள பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. நேற்றுக் காலையிலும் பிற்பகலுக்குப் பின்னரும் எல்லாமாக எட்டு இடங்களில் இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

இச்சம்பவங்களால் அப்பாவி மக்கள் 200 பேர் வரை அநியாயமாக பலியாகிப் போயுள்ளனர்.இச்சம்பவங்களில் காயமடைந்தோரின் எண்ணிக்ைக சுமார் 470 ஆகும்.

நேற்றுக் காலை முதன் முதலாக அதிர்ச்சி தரும் தகவலொன்று ஊடகங்கள் மூலம் வெளியானது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றதாக அந்தச் செய்தி கூறியது. உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

முதலில் சாதாரண சிறு சம்பவமாக இருக்குமென்றே அதனைப் பலரும் எடுத்துக் கொண்டனர். ஆனாலும் தொடர் சம்பவமாக அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருந்த போதுதான் நிலைமையின் விபரீதம் என்னவென்று புரிந்தது.மட்டக்களப்பு, தெஹிவனை, கடுவாப்பிட்டிய உட்பட பல இடங்களிலும் தொடராக குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற போதுதான் இச்சம்பவங்கள் பாரதூரமானவையென்பது தெரியவந்தது.

இதுவொரு சாதாரணமான சம்பவமல்ல. இதன் பின்புலம் மிகவும் பயங்கரமானதாகவே இருக்க வேண்டும். அத்துடன் அமைப்பு ரீதியாக, இத்தாக்குதல்கள் மிகவும் கனகச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது மட்டும் தெளிவாகப் புரிகின்றது. ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு குண்டுத் தாக்குதல் நடத்துவதென்பது சுலபமான காரியமல்ல. நன்கு திட்டமிடப்பட்டால் மாத்திரமே இவ்வாறான தாக்குதல்களை நடத்தி முடிக்க முடியும். ஆகவே தாக்குதல்களின் பின்புலம் பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறிருந்த போதிலும், நேற்றைய சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் துரிதமாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இச்சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் யாரென்பதும் தாக்குதல்களின் நோக்கமென்ன என்பதும் விரைவில் வெளிப்பட்டு விடும் என்பதுதான் பொலிஸாரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

இது போன்ற தொடர் தாக்குதல் சம்பவங்கள் இலங்கையில் முன்னொரு போதும் இடம்பெற்றது கிடையாது. இந்தியாவில் மும்பை, புதுடில்லி போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற தொடர் தாக்குதல் சம்பவங்கள் முன்னர் நிகழ்ந்திருப்பதை நாம் அறிவோம். ஆனாலும் இலங்கையில் அவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

மத ரீதியான வன்முறையா? நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையா? வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்தி இலங்கையில் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும் திட்டமா? இல்லையேல் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருவதை தடை செய்து நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமா? இவை அனைத்துமில்லாமல் நாட்டுக்குள் இன, மத ரீதியான வன்முறைகளை தூண்டி விடும் விஷமத்தனமா?

இவ்வாறெல்லாம் பல்வேறு கோணங்களில் நேற்றைய சம்பவங்கள் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கின்றது. நாட்டு மக்கள் உண்மையிலேயே அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர். இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்பது குறித்தோ தாக்குதல்தாரிகளின் உண்மையான இலக்கு குறித்தோ மக்களுக்கு எதுவுமே புரியாதிருக்கின்றது. ஏனென்றால் கிறிஸ்தவ தேவாலயங்களில் மாத்திரமன்றி வெளிநாட்டு பயணிகள் தங்குகின்ற ஹோட்டல்களிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கும் பலர் உயிரிழந்துள்ளனர்.

எனவே தாக்குதல் நடத்தியோரின் உண்மையான குறிக்கோள் எதுவென்றே அறிந்து கொள்ள முடியாதிருக்கின்றது. அதேசமயம், கிறிஸ்தவ மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை வார்த்தைகளால் விபரிக்க இயலாதுள்ளது. மக்களுக்காக சிலுவையில் இயேசுபிரான் மரித்த புனித வெள்ளி தினத்தை அனுஷ்டித்த கிறிஸ்தவ மக்கள் மூன்று நாட்களின் பின்னர் ஈஸ்டர் ஞாயிறு தினத்தை நேற்று கொண்டாட தயாரான வேளையிலேயே காட்டுமிராண்டித்தனமும் மூர்க்கத்தனமும் நிறைந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

அம்மக்களுக்கு ஏற்பட்ட துயரம் விபரிக்க முடியாதது.குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்பட்ட முடிவு பரிதாபமானது.புனிதம் நிறைந்த தினத்தன்று அவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அதேசமயம் மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா விடுதிகள்,வைத்தியசாலைகள், தூதரகங்கள், கத்தோலிக்க மதகுருமார்கள்,கத்தோலிக்க வணக்கஸ்தலங்கள் மற்றும் முக்கியத்துவமிக்க அரச நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு நேற்று பணிப்புரை வழங்கியிருந்தார்.

இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் குற்றவாளிகளை கண்டறிவதற்குமான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் தேசிய நடவடிக்கை மையம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன்,இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியவர்களுக்கு துரித சிகிச்சையளிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

இதேவேளை நேற்றுக் காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தவர்களுக்கும், காயத்திற்குள்ளான அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பில் கவலையைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நாசகார செயற்பாடுகள் நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் குலைக்கும் பாரிய செயற்பாடுகளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதத் தலங்கள் மற்றும் பிரதான ஹோட்டல்கள் சிலவற்றை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு அனைவரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தேவையான பணிப்புரைகளை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் உலக நாடுகளிலும் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை