மகுடம் சூடியது ஹமீத் அல் - ஹுசைனி

கொழும்பு ஹமீத் அல் --ஹுசைனி கல்லூரி மாணவன் அப்கர் போட்ட அபார கோல் உதவியுடன் 2--1 என திஹாரி அல்--அஸ்கர் கல்லூரியை வீழ்த்தி மகுடம் சூடியது .

கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் கடந்த ஞாயிறு இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி சம்பியன் பட்டத்தை சூடி ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்தது. கொழும்பு ஹமீத் கல்லூரியின் 80 ஆவது குழுவின் ஏற்பாட்டில் இடமபெற்ற 12 ஆவது பாடசாலைகள் உதைபந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது.

5ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரசிகர்கள் கண்டு களித்த இந்த இறுதிப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பு கலந்ததாக அமைந்துடன் சில கழகங்களுக்கு இடையிலான போட்டிகளை விட சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவாக அமைந்தது. போட்டி ஆரம்பித்த இரண்டவது நிமிடத்தில் ஹமீத் அல்-- ஹுசைனிக்கு கிடைத்த கோணர் கிக் மூலம் கோல்போடும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

ஆனால் கோல் வாயிலில் இருந்து எம்.என்.ஏ. பாசித் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்துக்கு மேலாக சென்றது.

போட்டியின் 10 நிமிடங்கள் கழித்து ஹமீத் அல்- ஹுசைனி அப்கர் கோல் போடும் வாய்ப்பை தவறவிட்டார்.

தொடர்ந்து அல் -அஸ்கருக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளை எப். ரஹ்மானும் எம். முஸம்மிலும் கோட்டைவிட்டனர்.

அதன் பின்னர் ஹமீத் அல்--ஹுசைனியின் ஆட்டத் திறன் வெளிப்பட்டபோதிலும் கோல் போடும் வாய்ப்புகளை அவ்வணி வீரர்கள் சரியாக பயன்படுத்த தவறினர்.

இடைவேளை நெருங்கும் தறுவாயில் பெனல்டி எல்லைக்கு வெளியில் 22 யார் தூரத்திலிருந்து அப்கர் இடது காலால் பலமாக உதைத்தபந்து அல் -அஸ்கரின் கோல்காப்பாளர் எம். சப்னியைப் பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் கோலினுள் புகுந்தது.

அந்த கோலைப் போட்ட உற்சாகத்தில் தனது ஜேர்சியை கழற்றி ஆரவாரம் செய்த அப்கர் அநாவசியமாக மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.

இடைவேளையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது 47ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் -ஹுசைனி வீரர் தினேஷ் சுரேன் மிக இலகுவான கோல் போடும் வாய்ப்பை தவறவிட.55ஆவது நிமிடத்தில் அல் -அஸ்கர் கோல்காப்பாளர் விட்ட தவறை நன்கு பயன்படுத்திக்கொண்ட அப்கர் தனது இரண்டாவது கோலைப் போட்டு ஹமீத் அல்- ஹுசைனியை 2 – 0 என முன்னிலைக்கு இட்டுச் சென்றார்.

எவ்வாறாயினும் 6 நிமிடங்கள் கழித்து ஹமீத் அல்- -ஹுசைனி பின்களத்தில் ஏற்பட்ட சிறு தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட அல்- அஸ்கர் வீரர் எம். நுஸ்ரி கோல் ஒன்றைப் போட்டு தனது அணிக்கு புத்துயிர் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் ஆக்ரோஷமாக விளையாடிய போதிலும் கோல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இறுதியில் ஹமீத் அல்-- ஹுசைனி 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.

இப் போட்டியில் அல்-- அஸ்கர் அணியின் வீரர்கள் மூவர் உபாதை காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஹமீத் அல்--ஹுசைனி கல்லூரியின் 80களின் பழைய மாணவக் குழுவினர் ஏற்பாடு செய்த 12ஆவது அழைப்புப் பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டியில் 19 பாடசாலைகள் பங்குபற்றின. மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இஸிபதன கல்லூரியை 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி வெற்றிகொண்டது.

எம். அப்கர் (எச்.ஏ.எச்.) இறுதி ஆட்ட நாயகன் தினேஷ் சுரேன் (எச்.ஏ.எச்) மிகவும் பெறுமதிவாய்ந்த வீரருக்கான தங்கப் பந்து விருதையும் எம்.எஸ். சப்ரின் (எச்.ஏ.எச்.) சிறந்த கோல்காப்பாளருக்கான தங்கக் கையுறை விருதையும் எம். இம்ரான் (அல்- அஸ்கர்) அதிக கோல்கள் (10) போட்ட வீரருக்கான தங்கப் பாதணி விருதையும் பெற்றனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு பிரதான ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணத்தை ஹமீத் அல்-- ஹுசைனி அணித் தலைவரிடம் வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட அனுசரணையாளர்கள் ஏனைய விருதுகளை வழங்கினர்.

கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில் ஹமீத் அல் --ஹுசைனி கல்லூரி இரண்டாமிடம் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

ஏ.ஆர்.பரீத்

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை