சர்வதேச நாடுகள் கூறும் வகையில் நாட்டை ஆட்சி செய்ய முடியாது

யார் மீதும் குற்றஞ்சாட்டாமல் பாதுகாப்புக்கு ஒத்துழைக்க தயார்

நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும்போது பொது மக்கள் சட்டத்தைக் தமது கைகளில் எடுக்காது பாதுகாப்புத் தரப்பினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நாடுகள் கூறும் வகையில் எமது நாட்டை ஆட்சிசெய்ய முடியாது என்பதை தற்போதைய அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். எமது நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாதுகாப்புத் தரப்பினருக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளை இனியாவது அரசாங்கம் கைவிட்டு, தேசிய பாதுகாப்புத் தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான முழுமையான ஒத்துழைப்பை எதிர்க்கட்சி அரசாங்கத்துக்கு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றையதினம் இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முப்பது வருடங்கள் தொடர்ந்து யுத்தத்தின் பின்னர் 2009ஆம் ஆண்டு நாம் இவ்வாறு ஒரு சூழ்நிலையை மீண்டும் எதிர்கொள்ள நேரும் என நினைத்துப் பார்க்கவில்லை. யுத்தம் முடிவடைந்து பத்துவருட பூர்த்தியை அடுத்த மாதம் கொண்டாடவிருக்கும் நிலையில் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 30 வருட யுத்தத்திலும் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படவில்லை. எல்.ரி.ரி.ஈயினர் ஒரே தடவையில் பல குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும் இது போன்றதொரு அழிவு அப்போது நிகழவில்லை. தெற்காசியாவில் இடம்பெற்றுள்ள மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் மும்பைத் தாக்குதலில் கூட இந்தளவு எண்ணிக்கையானவர்கள் பலியாகவில்லை.

இந்த கொடூரமான சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும். இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும் என ஏற்கனவே பொலிஸார் அறிவித்திருந்த போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. குறைந்தபட்சம் சமயத் தலங்களின் முக்கியஸ்தர்களுக்காவது அறிவித்திருக்கலாம். கத்தோலிக்க மற்றும் ஏனைய தேவஸ்தானங்களின் தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதா என நான் சபையில் கேட்க விரும்புகின்றேன். அத்தகைய வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதா? எதுவுமே இடம்பெறவில்லை என்பதே தற்பொழுது புலனாகிறது.

ஈஸ்டர் பண்டிகை போன்ற முக்கியமான நாட்களில் இடம்பெறும் திருப்பலி பூஜைகளில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வது இயல்பு. எனினும், இம்முறை அவ்வாறு எவரும் ஆலயங்களுக்குச் செல்வதைக் காணமுடியாதிருந்தது. அவர்கள் தம்மை மாத்திரமே பாதுகாத்துக் கொண்டனர்.

புலனாய்வுப் பிரிவினரையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் வேட்டையாடும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவ வீரர்களை சிறையில் அடைப்பதும், முன்னாள் படைத் தளபதிகளை சீ.ஐ.டி விசாரணைகளுக்கு அனுப்புவதுமே தற்பொழுது இடம்பெற்று வருகிறது. யுத்தகாலத்தில் எனது சகோதரர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தமையால் தற்பொழுது அவருக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவினாலேயே அவரை சிறையில் அடைக்க முடியாமல் போனது. எனினும், அரசாங்கம் கூறுவதைப்போல அது ராஜபக்ஷக்களின் முப்படைகள் அல்ல, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முப்படைகளே. அதேபோன்று புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் புலனாய்வுப் பிரிவினரே. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொறுப்பு அவர்களையே சார்ந்ததாகும். அதை தற்போதைய அரசாங்கம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாடுகள் கூறும் வகையில் எமது நாட்டை ஆட்சிசெய்ய முடியாது என்பதை தற்போதைய அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை