விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழிறங்கியதாக ஆரம்ப அறிக்கை

கடந்த மாதம் விபத்துக்குள்ளான எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் அது விபத்துக்குள்ளாவதற்கு முன் பல தடவைகள் திடீரென வேகமாக சரிந்திருப்பதாக விபத்து தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போயிங் பரிந்துரைத்த செயல்முறைகளை விமானி தொடர்ச்சியாக பின்பற்றியதாக இந்த விபத்துக் குறித்து வெளியாகி இருக்கும் முதல் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் விமானிகளால் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல்போயுள்ளது என்று எத்தியோப்பிய நாட்டு போக்குவரத்து அமைச்சர் டக்மாவித் மோகெஸ் குறிப்பிட்டுள்ளார். அடிடாஸ் அபாபாவில் இருந்து புறப்பட்ட ஈ.டீ.302 என்ற இந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 157 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஐந்து மாதங்களில் போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்களில் இரண்டாவது விபத்தாக இது இருந்தது. கடந்த ஒக்டோபரில் லயன் ஏர் விமான ஜே.டீ.610 இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் விழுந்து 189 பேர் உயிரிழந்தனர்.

அடிடாஸ் அபாபாவில் நேற்று செய்தியார் சந்திப்பில் பேசிய டக்மாவித், “உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் விமான ஊழியர்கள் பின்பற்றினார்கள் ஆனால் அவர்களால் விமானத்தை கட்டுப்படுத்த முடியாமல்போயுள்ளது” என்றார்.

இந்த விமான விபத்தை அடுத்து உலகெங்கும் இயங்கி வந்த 737 மெக்ஸ் ரக விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன. இதனால் 300 க்கும் அதிகமான விமானங்கள் பாதிக்கப்பட்டன.

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை