திருத்தந்தையர்களின் வாழ்வில் முக்கிய இடம்பிடித்துள்ள புனித சூசையப்பர்

இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித சூசையப்பர் (ஜோசப்) கடந்த நூறு ஆண்டுகளில் திருத்தந்தையரின் தனிப்பட்ட வாழ்விலும் தலைமைப் பணிகளிலும் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றார்.

திருஅவையின் முதல் திருத்தந்தையான திருத்தூதர் புனித பேதுருவுக்குப் பின்னர் பல திருத்தந்தையர்கள் ஜோன், பெனடிக்ட், பவுல், கிரகரி போன்ற பெயர்களையே தேர்ந்தெடுத்தனர். ஆயினும் கடந்த நூற்றாண்டில் பல திருத்தந்தையர்கள் தங்களின் திருமுழுக்குப் பெயராக புனித ஜோசப் பெயரைக் கொண்டிருந்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  திருத்தந்தையாகத் தலைமைப்பணியாற்றிய பத்தாம் பயஸ் அவர்களின் இயற்பெயர் ஜூசப்பே மெல்கியோரே சார்த்தோ. புனித 23ம் ஜோன் அவர்களின் இயற்பெயர்  ஜூசப்பே ரொங்காலி. புனித திருத்தந்தை 2ம் ஜோன் போல் அவர்களின் இயற்பெயர் கரோல் யோசேப் வொய்த்தில்யா. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இயற்பெயர் யோசேப் இராட்சிங்கர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இயற்பெயர் ஜோசப் இல்லையெனினும் அவர் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை  மார்ச் 19ம் திகதி  புனித ஜோசேப்பின் விழாவன்றேதொடக்கினார்.

புனித ஜோசப்பின் விழா

திருத்தந்தை 5ம் பயஸ் அவர்கள் 1570ம் ஆண்டில் புனித ஜோசப் விழாவை மார்ச் 19ம் திகதி என அறிவித்து திருவழிபாட்டில் புனித ஜோசப் பக்தியை ஆரம்பித்தார். 1870 ற்கும், 1955ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புனித ஜோசப் கன்னி மரியின் கணவர் மற்றும் உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலர் எனச் சிறப்பிக்கப்பட்டது. பின்னாளில் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள் புனித ஜோசப் உலகளாவியத் திரு அவையின் பாதுகாவலர் என அறிவித்தார்.

திருப்பலியில் நற்கருணை மன்றாட்டுச் செபங்கள் இரண்டு மூன்று மற்றும் நான்கில் புனித கன்னி மரியின் கணவரான புனித ஜோசப்பின் பெயர் இணைக்கப்பட வேண்டும் என்று  முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்தார். இதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  2013ம் ஆண்டு மே முதல் திகதியன்று உறுதி செய்தார்.

புனித 23ம் ஜோன் அவர்கள் 1962ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி பழங்கால உரோமன் திருப்பலி முறைமையில் நற்கருணை மன்றாட்டுச் செபத்தில் புனித ஜோசப்பின் பெயரை இணைத்தார். இத் திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை இயேசுவின் மண்ணகத் தந்தையான புனிதஜோசப்பிற்கு அர்ப்பணிக்க விரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.                     -

(கிறிஸ்டோபர் பிரான்சிஸ்)

Tue, 04/02/2019 - 10:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை