சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாதக் குழுக்களை முற்றாக ஒழிக்க அரசு தயார்

சவால்களை எதிர்கொள்ள தயார் நிலையில் முப்படை

தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முப்படையினரின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எங்கேனும் தீவிரவாதக் குழுக்கள் இருந்தால் அவற்றை முற்றாக அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

இத் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான எச்சரிக்கைகள் ஏற்கனவே அறியக்கிடைத்திருந்தும் அது தொடர்பில் எனக்கும் அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் பல

சர்வதேச நாட்டுத் தலைவர்கள் தீவிரவாதத்தை அழிப்பதற்கும் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாரகவுள்ளதாகவும் தொலைப்பேசியில் அழைப்புவிடுத்து தெரிவித்தனர் என்றும் பிரதமர் கூறினார். அத்துடன், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு ஆரம்பகட்ட இழப்பீடுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டியதாவது, இலங்கையில் இன்று இடம்பெற்றுள்ள தீவிரவாதத் தாக்குதல்களுக்கும் முதலில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். தீவிரவாதம் தலைத்தூக்க இடமளிக்க முடியாது. குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடங்களையும் சென்று பார்வையிட்டேன். 200இற்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். வெளிநாட்டவர்களும் இறந்துள்ளனர்.

இந்தத் சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முப்படையினருடன் இணைந்து நடவடிக்ைக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் பொதுமக்கள் சட்டம்,ஒழுங்கு மற்றும் சமாதானத்தை பேணவேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரவாதக் குழுக்களுக்கு இடங்கொடுப்பதாக மாறிவிடும்.

இன்றும் நாளையும் பாடசாலைகள், பல்கலைகழகங்களை மூடுமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு பணிப்புரைவிடுக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையை முன்னெடுப்பதற்கான பணிப்புரை சுகாதார அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆரம்பகட்ட இழப்பீடுகளை வழங்கள் மற்றும் உயிரழந்தவர்களின் உடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்ககைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதக் குழுக்கள் இருந்தால் அவற்றை அழிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட அமைச்சரவைக் கூட்டத்திலும், பாதுகாப்பு சபைக் கூட்டத்திலும் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை