புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி வெற்றி

புத்தளம் வலய பாடசாலைகளின் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர் அணியினர் சம்பியன்.

இந்த போட்டிகள் செவ்வாய்க்கிழமை (02) காலை புத்தளம் தில்லையடி மு.ம.வி. மைதானம் மற்றும் நாகவில்லு எருக்கலம்பிட்டி மு.ம.வி. மைதானங்களில் நடைபெற்றன. இந்த போட்டியில் புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட 15 பாடசாலைகளின் மாணவர்கள் அணியினர் பங்கேற்றனர்.

விலக்கல் முறையிலான இந்த தொடரில் முதலாவது அரை இறுதி போட்டியில் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி, மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலய அணியை 4:0 கோல்களினால் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரை இறுதி போட்டியில் கல்பிட்டி அல்- அக்ஸா தேசிய கல்லூரி அணி, நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலய அணியை பெனால்டி உதை மூலம் 4:2 கோல்களினால் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

கல்பிட்டி அல் -அக்ஸா தேசிய கல்லூரி அணிக்கும், புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணிக்குமிடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 1:0 கோல்களினால் வெற்றி பெற்று முதலாம் இடத்தினை பெற்று சம்பியனாகியதோடு இரண்டாம் இடத்தினை கல்பிட்டி அல்- அக்ஸா தேசிய கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலய அணி மூன்றாம் இடத்தினையும், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலய அணி தொடரின் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. ஏற்கனவே புத்தளம் கோட்டக்கல்வி காரியாலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் 16,18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர் அணியினர் மூன்று பிரிவுகளிலும் சம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது.

புத்தளம் தினகரன் நிருபர்

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை