மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர்

இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர், கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

உள்ளூர் அணிகளுக்கு இடையிலான “சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கெட் தொடர்” என அழைக்கப்படும் இத்தொடர், 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடருக்கான ஆரம்ப நிகழ்வு கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது இத்தொடரில் பங்கேற்கும் நான்கு அணிகளின் தலைவர்கள், அணிகளின் உரிமையாளர்கள், இத்தொடரின் இயக்குனர், உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான உப தலைவர் மற்றும் இத்தொடரில் விளையாடும் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இத்தொடரில் கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்புள்ளை என நான்கு அணிகள் விளையாடுகின்றன. இதில் தம்புள்ளை அணிக்கு அஞ்சலோ மெத்தியூசும், கொழும்பு அணிக்கு தினேஸ் சந்திமாலும், கண்டி அணிக்கு திமுத் கருணாரத்னவும், காலி அணிக்கு லஹிரு திரி மன்னவும் தலைமை தாங்குகின்றனர். கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திமுத் கருணாரத்னவின் மீது தற்போது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகக் கிண்ண அணியில் திமுத் கருணாரத்ன இடம்பெறுவார் எனவும், ஒருவேளை அவர் அணித்தலைவராகவும் செயற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு பின்னர் திமுத் கருணாரத்ன சர்வதேசத்தில் நடைபெறும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், இத்தொடர் முடிவடைந்தவுடன் உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்படுமெனவும், திமுத் கருணாரத்ன அணித்தலைவராக செயற்படுவாரா இல்லையா என்பது தெரியவரும் எனவும் கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இவ்வாறு, வீரர்களுக்கு மத்தியில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த தொடரிலிருந்து சில முக்கிய வீரர்கள் உபாதை காரமணாக வெளியேறியுள்ளனர். இதில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தசுன் ஷானக விலகியுள்ளதுடன், அசேன் பண்டாரவும் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அனுமதியை அடுத்து ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, சுப்பர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தொடரில் முதல் இடம்பெரும் அணிக்கு கிண்ணம் மற்றும் ஒரு மில்லியன் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும், இரண்டாவது இடத்திற்கு கிண்ணம் மற்றும் 750,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் நடைபெறும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே, உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிப்பர். ஆகையால் இத்தொடர் ஒவ்வொரு வீரருக்கும் மிக முக்கியமான தொடராக அமையவுள்ளது.

Wed, 04/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை