தீவிரவாதிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்க ​வேண்டும்

சடலங்களை ஏற்க மாட்டோம்

பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை அடையாளங் கண்டு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரியுள்ளது. இதனுடன் தொடர்புள்ளவர்கள் பற்றி ஆதாரங்களுடன் முன்கூட்டியே பல தடவை நாம் முறையிட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அத்தோடு பயங்கரவாதிகளின் சடலங்களைக் கூட ஏற்கத்தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் இயக்க ரீதியான பிளவை பயன்படுத்தி சுயநலத்திற்காக ஏனையவர்களை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும் உலமா சபை கோரியுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் விளக்களிக்கும் ஊடக மாநாட்டில் உலமா சபை தலைவர்,உப தலைவர்கள் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

உலமா சபை உப செயலாளர் முர்சித் முளப்பர் கூறியதாவது,

மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியவர்கள் எமது முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் சடலங்களை கூட நாம் ஏற்கத் தயாரில்லை.தமது மத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உரிமையிருப்பதோடு மதஸ்தலங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலமா சபை உப செயலாளர் எம்.எஸ்.எம். தாஸிம்,

தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு கிறிஸ்தவ சகோதரர்களுடன் கைகோர்த்துக் கொள்கிறோம்.இந்த தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலை அடிப்படையாக வைத்து இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படாதவாறு தலையீடு செய்த பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் மத தலைவர்களின் வழிநடத்தலை பாராட்டுகிறோம்.

இலங்கை வரலாற்றில் ஒரு போதும் இவ்வாறான வன்செயல்களில் முஸ்லிங்கள் ஈடுபட்டது கிடையாது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக அரச அதிகாரிகளுடன் ஆரம்ப முதல் முஸ்லிம்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக 2015 இல் நாம் அறிக்கை வெளியிட்டிருந்தோம். அன்று தொடக்கம் தீவிர சிந்தனையுள்ளவர்கள் தொடர்பாக உலமா சபையும் ஏனைய அமைப்புகளும் பாதுகாப்பு தரப்பிற்கு முறையிட்டு வந்துள்ளதோடு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தது.

உலமா சபைத் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி கூறுகையில் ,

துக்கம் அனுஷ்டிப்பதற்காக சகலரும் ஒர் இடத்தில் கூட அரசிடம் அனுமதி கோரினாலும் நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.மத்ரஸாக்கள் பதிவு செய்யப்பட்டு உரிய முறையிலே இயங்குகின்றன. முஸ்லிம்கள் இங்கு குடியேறியது முதல் மத்ரஸாக்கள் இயங்குகின்றன.தீவிரவாதத்துடன் யார் தொடர்புபட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க ​வேண்டும்.

ஏதும் இயக்கமோ அரசியல் வாதியோ தமது சுயலாபத்திற்காக யாரையாவது காட்டிக்கொடுக்க முயலக் கூடாது. இது மனிதாபிமனத்திற்கு மட்டுமன்றி இஸ்லாத்திற்கும் முரணானது.

உலமா சபை இளைஞர் விவகார செயலாளரும் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான அர்கம் நூர் அமித் கூறியதாவது,

தீவிரவாத போக்குள்ளவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் பாதுகாப்பு தரப்பிற்கு பல தடவை அறிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கில் தனிநபர் ஒருவர் இவ்வாறு இயங்குவது குறித்து அப்பகுதி மக்களும் காத்தான்குடி பொலிஸில் முறையிட்டிருந்தார்கள். இறுதியாக நாம் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து இவ்வாறான நபர்கள் பற்றி அறிவித்திருந்தோம்.

ஆனால் ஏன் எமது முறைப்பாடுகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை.

தௌஹித் ஜமாஅத் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளபோதும் சகல அமைப்புகளும் பயங்கவரவாதத்துடன் தொடர்புள்ளவை என்று கூற முடியாது. தேசிய தௌஹீத் ஜமாஅத் எனும் அமைப்புடன் தொடர்புள்ளவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முஸ்லிம் அமைப்புகளிடையே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 04/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை