மயிரிழையில் உயிர்தப்பிய தசுன் சானக்க

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களின்போது இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தசுன் சானக்க மயிரிழையில் உயிர்தப்பியிருப்பதோடு, அந்தப் பயங்கரத்திற்குப் பின் வெளியே செல்ல பயப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

27 வயதான சகலதுறை வீரர் தசுன் சானக்க, முந்தைய தினம் மேற்கொண்ட பயணத்தின் களைப்புக் காரணமாக தனது சொந்த ஊரான நீர்கொழும்பிலுள்ள புனித செபஸ்டியன்ஸ் தேவாலயத்திற்கு செல்வதை தவிர்த்துக் கொண்டதாக ‘கிரிக்கின்போ’ இணைதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் என ஆறு இடங்கள் மீது இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களில் 321 பேர் வரை கொல்லப்பட்டனர்.

“சாதாரணமாக நான் தேவாலயத்திற்கு செல்வேன். (ஆனால்) நான் களைப்படைந்திருந்தேன்” என்று சானக்க குறிப்பிட்டுள்ளார். “அன்று காலை நான் எனது வீட்டில் இருந்தேன். சத்தம் கேட்டது. தேவாலயத்தில் குண்டு வெடித்ததாக மக்கள் குறிப்பிட்டார்கள். நான் அங்கு ஓடிச் சென்றேன், அந்த காட்சியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

ஒட்டுமொத்த தேவாலயமும் அழிந்துவிட்டது, முற்றிலும் நொறுங்கிவிட்டது, உயிரற்ற உடல்கள் வீசி எறியப்பட்டிருந்தன” என்று அவர் விபரித்துள்ளார்.

இலங்கை அணிக்காக 19 ஒருநாள், 27 டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் சானக்க, “வீதிக்கிச் செல்லக் கூட நான் பயப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை