புரூணையில் இஸ்லாமிய தண்டனை சட்டம் அமுல்

பல குற்றங்களுக்கு மரண தண்டனை

விபச்சாரம் மற்றும் ஒருபால் உறவுக்கு கல்லெறிந்து கொல்லப்படுவது உட்பட கடுமையான புதிய இஸ்லாமிய சட்டங்களை புரூணை அறிமுகம் செய்துள்ளது.

நேற்று புதன்கிழமை அமுலுக்கு வந்த இந்த புதிய சட்டங்களில் திருட்டுக்கு உறுப்புகளைத் துண்டிப்பது உட்பட ஏனைய பல குற்றச்செயல்களுக்கும் தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடான புரூணையின் சுல்தான் நேற்று பொதுமக்கள் முன் உரையாற்றும்போது, இதனை வலுவான இஸ்லாமிய போதனை என்றார். “இந்நாட்டில் இஸ்லாமிய போதனை வலுவாக வளர்ச்சி அடைவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று சுல்தான் ஹஸன் பொல்கியா குறிப்பிட்டார்.

புதிய சட்டத்தின்படி ஒப்புதல் வாக்குமூலம் அல்லது நான்கு சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே தனி நபர் ஒருவர் ஒருபால் உறவில் ஈடுபட்டதாக குற்றங்காணப்படுவார்.

ஒருபால் உறவு ஏற்கனவே புரூணையில் சட்டவிரோதம் என்பதோடு அது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது.

முழுமையான முடியாட்சியில் எண்ணெய் வளம் கொண்ட புரூணையில் 51 ஆண்டுகளாக அரியணையில் உள்ள சுல்தான் ஹஸனல் பொல்கியா, 2013ஆம் ஆண்டு புதிய தண்டனைச் சட்டத்தை அறிமுகம் செய்தபோதும், அது முழுமையாக அமுல்படுத்துவதில் தாமதம் நீடித்து வந்தது.

உலகில் இரண்டாவது நீண்டகாலம் பதவியில் இருக்கும் ஆட்சியாளரான 72 வயது பொல்கியா உலகின் பெரும் செல்வந்தர்களிலும் ஒருவராவார்.

இந்த புதிய சட்டங்கள் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அமுல்படுத்தப்படுவதோடு சில விடயங்களில் முஸ்லிமல்லாதோருக்கும் பொருந்துவதாக உள்ளது. இதில் கற்பழிப்பு, விபச்சாரம், ஒருபாலுறவு, கொள்ளை மற்றும் இறைத்தூதரை அவமதிப்பது உட்பட குறிப்பிடத்தக பல குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்படுகிறது.

இந்த புதிய சட்டங்களில் கருக்கலைப்புக்கு பொது இடத்தில் கசையடித் தண்டனை மற்றும் இஸ்லாத்தை தவிர வேறு மதங்களை மற்றும் வழிபாடுகளை முஸ்லிம் சிறுவர்களுக்கு வெளிப்படுத்துவதும் குற்றவியல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா மற்றும் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளுடன் கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவில் முதல் நாடாக புரூணை புதிய தண்டனைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை