நில அளவைக்கு எதிராக மண்டைதீவில் போராட்டம்

காணி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்

யாழ். மண்டைதீவில் கடற்படையினர் நிலை கொள்வதற்காக பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்காக நேற்று நடைபெறவிருந்த நில அளவை நடவடிக்கை எதிர்ப்புப் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. நேற்றுக் காலை 9 மணியளவில் மண்டைதீவு கிழக்கு அம்மன் கோவில் முன்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் அப்பகுதியில் உள்ள சுமார் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் 1 றூட் 10 பேர்ச்சஸ் காணியை ஆக்கிரமித்து அதில் முகாமிட்டுள்ளனர். இப் படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந் நடவடிக்கையில் முதற்கட்டமாக காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி காணிகளை சுவீகரிக்க போவதாகவும், அதற்கான நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி நேற்று வியாழக்கிழமை காணிகள் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணி சுவீகரிப்புக்கான நில அளவை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து நில அளவையை தடுத்து நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தையடுத்து காணி சுவீகரிப்புக்காக நில அளவை செய்ய வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பால் நில அளவை செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை